தினமணி 01.09.2009
வில்லிசேரி அருகே குடிநீர்க் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை பார்வையிடும் நகர்மன்றத் தலைவி மல்லிகா மற்றும் உறுப்பினர்கள்.
கோவில்பட்டி, ஆக. 31: கோவில்பட்டி நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் குழாய்களின் சீரமைப்புப் பணியை நகர்மன்றத் தலைவி பார்வையிட்டார்.
சீவலப்பேரி கூட்டு குடிநீர்த் திட்டம் மூலம் சீவலப்பேரியில் இருந்து கோவில்பட்டி நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்தக் குழாய்களில் கடந்த சில ஆண்டுகளாகவே உடைப்புகள் ஏற்பட்டு, குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, கோவில்பட்டிக்கு 2-வது பைப்லைன் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதற்காக குடிநீர் வடிகால் வாரியம் அறிக்கை தயார் செய்து, அரசின் அனுமதிக்காக அனுப்பியுள்ளது.
இந்நிலையில், திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் வில்லிசேரி அருகே குடிநீர்க் குழாயில் ஞாயிற்றுக்கிழமை உடைப்பு ஏற்பட்டது. இதை சரிசெய்யும் பணியில் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவில்பட்டி நகர்மன்றத் தலைவி மல்லிகா தலைமையில், துணைத் தலைவர் சந்திரமெüலி மற்றும் உறுப்பினர்கள் உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளைச் சென்று பார்வையிட்டனர். பின்னர், பணிகளை விரைந்து முடிக்குமாறு குடிநீர் வடிகால் வாரிய உதவி கோட்ட பொறியாளர் கோட்டியப்பன், உதவி பொறியாளர் சுப்புராம் ஆகியோரிடம் கேட்டுக் கொண்டனர்.
இதுகுறித்து நகர்மன்றத் தலைவி மல்லிகா செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவில்பட்டியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண 2-வது பைப்லைன் திட்டத்திற்கான அனுமதியை அரசு உடனடியாக வழங்க வேண்டும். மேலும், லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்றார்.