தினமணி 04.10.2010
விளம்பரப் பலகைகளை முறைப்படுத்த அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம்
தூத்துக்குடி, அக். 3: தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் விளம்பர பலகைகள் வைப்பதை முறைப்படுத்துவது தொடர்பாக அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு, நகர ஏ.எஸ்.பி. சோனல் சந்திரா தலைமை வகித்தார். போலீஸ் ஆய்வாளர்கள் பிரான்சிஸ், ஜெயபிரகாஷ், போக்குவரத்து பிரிவு ஆய்வாளர் சுப்பையா, உதவி– ஆய்வாளர்கள் ரமேஷ், ஆபிரகாம் குரூஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரசியல் கட்சிகள் சார்பில்,மாநகர செயலர்கள் எஸ்.ஆர். ஆனந்தசேகரன் (திமுக), எஸ். ஏசாதுரை(அதிமுக), ஞானசேகர் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), மாடசாமி (மதிமுக), பி.எம்.அற்புதராஜ் (சமக),மாநில இலக்கிய அணி துணைச் செயலர் மகராஜன், மாவட்ட இளைஞரணி செயலர் எம்.எக்ஸ். வில்சன், மாணவர் காங்கிரஸ் துணைத் தலைவர் ஜெயக்குமார், பா.ம.க மாவட்டத் தலைவர் மாரிசெல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அக். 11-ம் தேதி முதல் அனைத்து டிஜிட்டல் விளம்பர பலகைகளும் மாநகராட்சி அனுமதி பெற்று தான் வைக்க வேண்டும். வேறு இடங்களில் நடைபெறும் விழாக்களுக்கான விளம்பர பலகைகளை மாநகராட்சி பகுதியில் வைக்கக் கூடாது.
கோயில் கொடை விழா போன்ற விழாக்களுக்கான விளம்பர பலகைகளை ஒரு வாரம் மட்டுமே வைக்க வேண்டும். அரசியல் கட்சிகள் நிகழ்ச்சி நடைபெறும் 2 நாள்களுக்கு முன்பாக டிஜிட்டல் போர்டுகள் வைத்து, நிகழ்ச்சி முடிந்த 2 நாள்களுக்குள் அகற்றி விட வேண்டும்.
குறித்த நாள்களுக்குள் அகற்ற முடியவில்லை என்றால் போலீஸôரிடம் தெரிவித்து கூடுதல் அனுமதி பெற வேண்டும். இந்த விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.