தினமலர் 26.03.2010
விளம்பர பலகை அகற்றம்
கூடலூர்: கூடலூர் புதிய பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா அருகே, வழித்தட அறிவிப்பு பலகையை மறைத்து வைத்திருந்த ‘டிஜிட்டல்‘ பேனர் அகற்றப்பட்டது. கூடலூர் புதிய பஸ் ஸ்டாண்ட் ரவுண்டான பகுதியிலிருந்து, மைசூர் சாலையும், கேரளா மாநிலம் வயநாடு மற்றும் தேவர்சோலை சாலை பிரிந்து செல்கிறது. சாலை பிரியும் பகுதியில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் வழித்தட அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அறிவிப்பு பலகையை மறைந்து, விளம்பர பேனர்கள் வைக்கப்படுவது அதிகரித்து வருகிறது; இப்பகுதிக்கு வாகனங்களில் புதிதாக வருபவர்கள், வழித்தடம் தெரியாமல் அவதிப்பட வேண்டியுள்ளது. மறைத்து வைக்கப்படும் விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நேற்று மதியம் நகராட்சி கவுன்சிலர் ஆண்டனி முன்னிலையில், நகராட்சி ஊழியர்கள், விளம்பர பலகையை அகற்றினர். ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், நகராட்சியின் அனுமதி பெற்று வைக்கும் படி, ஊழியர்கள் அறிவுறுத்தினர். கூடலூர் நகரப் பகுதியில், போக்குவரத்துக்கு இடையூறாக விளம்பர பலகைகள் வைப்பதை, நகராட்சி நிர்வாகத்தினர் தடுக்க வேண்டும்.