தினகரன் 13.01.2010
விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் போலிடீதூள்தயாரித்த ரைஸ்மில்லுக்குசீல் அதிகாரிகள் அதிரடி
விழுப்புரம் : விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் போலி டீ தூள் தயாரித்த ரைஸ்மில்லுக்கு சீல் வைக்கப்பட்டது. சுகாதாரத்துறை அதிகாரி இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் கலப்படத்தை ஒழிப்பதற்கு சுகாதாரத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறையினர் தினமும் ஒவ்வொரு கடைகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் உள்ள ரைஸ்மில்லில் போலி டீ தூள் தயாரிப்பதாக தகவல் வந்தது. பின்னர் அங்கு சென்ற சுகாதார துறையினர் சோதனை நடத்தினர். அங்கு முந்திரிக்கொட்டை தோல், புளியங்கொட்டை ஆகியவற்றை அரைத்து டீ தூளில் கலப்படம் செய்ய வைத்திருந்தது தெரியவந்தது. அங்கிருந்த புளியங்கொட்டை தூள் 104 மூட்டை கள், விற்பனைக்கு கொண்டு செல்ல வைத்திருந்த போலி டீத்தூள் 14 மூட்டைகள் ஆகியவற்றை சுகாதாரத் துறையினர் கைப்பற்றினர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை இணை இயக்குநர் கிருஷ்ணராஜ் கூறியதாவது. விக்கிரவாண்டியில் செயல்படாத ரைஸ்மில்லில் போலீ டீதூள் தயாரிப்பதாக தகவல் வந்தது. அதனடிப்படையில் சோதனை செய்ததில் டீதூளில் கலப்பதற்காக புளியங்கொட்டை மற்றும் முந்திரிக்கொட்டை தோலை அரைத்து வைக்கப்பட்டிருந்தது. இதன் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும். நாங்கள் வருவது தெரிந்து அவர்கள் தலைமறைவாகி விட்டனர். பாமர மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை இது பாதித்திருக்கும்.
இதனால் வாய் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், சிறுநீர் புற்றுநோய் வரக்கூடும். இங்குள்ள பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரைஸ்மில்லுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த தூளை சென்னையில் உள்ள கிண்டிக்கு சோதனைக்காக அனுப்பிவைக்கப்படுகிறது.
பொதுமக்களும் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள இது போன்ற சம்பவங்கள் நடந்தால் உடனே தெரிவிக்க வேண்டும். தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தேடிவருகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரைஸ்மில்களும் கணக்கெடுக்கப்பட்டு சோதனை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.சோதனையின் போது வட்டார மருத்துவ அலுவலர் ரவிக்குமார், மேற்பார்வையாளர் கலியபெருமாள். சுகாதார ஆய்வாளர்கள் உதயசூரியன், பக்ரி, பாலு, ரமணி, கதிரவன் ஆகியோர் இருந்தனர்.