தினமணி 12.02.2010
வீடுகளை தரம் குறையாமல் கட்டினால் பரிசு: மு.க. ஸ்டாலின்
தாம்பரம், பிப்.11: கட்டப்படவுள்ள 26,144 வீடுகளை தரம் சிறிதும் குறையாமல் ஒரு ஆண்டுக்குள் கட்டி முடித்தால் உரிய பரிசு வழங்கப்படும் என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.
அவசர சுனாமி மறு குடியமர்வுத் திட்டத்தின் கீழ், சென்னை மெரீனா மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளில் ரூ.1247.12 கோடியில் கட்டப்படவுள்ள 26,144 அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் செம்மஞ்சேரி புதிய பேருந்து நிலையம் ஆகியவற்றின் அடிக்கல் நாட்டுவிழா சென்னை செம்மஞ்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அடிக்கல் நாட்டி துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது:
கடந்த 1970 முதல் 2006 வரை 36 ஆண்டுகளில் 77,627 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், 2006}க்கு பிறகு 82,000 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 42,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 40,000 வீடுகளில் 26,144 வீடுகளைக் கட்டுவதற்கு இங்கே அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
எனக்கு அடிக்கல் நாட்டு விழாக்களில் பங்கேற்பதை விட, திறப்பு விழாக்களில் பங்கேற்கவே விருப்பம். ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை முடிக்க 3 ஆண்டுகள் ஆகும் என்று அதிகாரிகள் முதல்வரிடம் கூறியபோது, 2 ஆண்டுகளில் முடித்தால் பரிசு வழங்குவதாக முதல்வர் கலைஞர் அறிவித்தார். நாங்களும் அதை ஒரு சவாலாகவே ஏற்று 21 மாதங்களில் முடித்து முதல்வரின் பாராட்டையும், ராமநாதபுரம் மக்களின் பாராட்டையும் பெற்றோம்.
அது போலவே, இந்தத் திட்டத்தையும், தரம் சிறிதும் குறையாமல், அதே சமயம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 15 மாதங்களுக்குப் பதிலாக ஒரே வருடத்தில் நிறைவேற்றித் தந்தால் உரிய பரிசு வழங்கப்படும்.
சமீபத்தில் தில்லிக்குச் சென்றிருந்தபோது நான் பல மாநில முதல்வர்களைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது சில அமைச்சர்கள் என்னிடம் எப்படி 21 லட்சம் வீடுகளைக் கட்டித்தரப் போகிறீர்கள் என்று கேட்டனர்.
நான் அவர்களிடம் தமிழ்நாட்டில் அடித்தட்டு மக்களுக்காக திமுக அரசு நிறைவேற்றி வரும் பல்வேறு நலத் திட்டங்களையெல்லாம் விளக்கியபோது, நாங்களும் எங்களது மாநிலங்களில் நிறைவேற்றுவோம் என்று அவர்கள் கூறினார்கள்‘ என்றார் மு.க.ஸ்டாலின்.
விழாவில் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், தா.மோ.அன்பரசன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.வி. சேகர், எஸ்.ஆர்.ராஜா, சென்னை மேயர் மா.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் கே.மிஸ்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.