தினமலர் 05.01.2010
வீடுகள் அதிரடியாக இடிப்பு : அபார்ட்மென்ட்டில் விதிமீறல்
கோவை : கோவை நகரிலுள்ள அபார்ட் மென்ட்டில், விதிமீறி பார்க்கிங் இடத்தில் கட்டப்பட்டிருந்த நான்கு குடியிருப்புகள் இடித்து அகற்றப் பட்டன. சாயிபாபாகாலனியில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த இணைப்புச் சாலை மீட்கப்பட்டது.ஆர்.எஸ்.புரம், டி.பி.ரோடு – பொன்னுரங்கம் ரோடு சந்திப்பில் தனியார் அபார்ட்மென்ட் உள்ளது. நான்கு தளங்களை கொண்ட இந்த அபார்ட்மென்ட்டின், தரை தளத்திலுள்ள ஒரு பகுதியில், வாகன பார்க் கிங் வசதி இருந்தது. இந்த இடத்தை நான்கு பகுதிகளாக பிரித்து, அவற்றில் நான்கு குடியிருப்புகள் கட்டும் பணி நடந்தது; ஜன்னல், கதவுகள் பொருத்தப்பட்டன.
இது குறித்து, மாநகராட்சி நகரமைப்பு பிரிவுக்கு புகார் வந்தது. மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர்கள், ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கான சிறப்பு படையினர், அபார்ட்மென்ட் கட்டடத்தை ஆய்வு செய்தனர். கட்டட வரைபட அனுமதிப்படி கட்டடம் உள்ளதா, என ஆய்வு நடத்தினர். வாகன பார்க்கிங் வசதிக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் குடியிருப்புகள் கட்டப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, விதிமீறிய நான்கு குடியிருப்புகளும் அதிரடியாக இடித்து அகற்றப்பட்டன.
இதே போன்று, சாயிபாபாகாலனியிலும் ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன. என்.எஸ்.ஆர்., ரோட்டிலுள்ள பி அண்ட் டி காலனி எதிரிலுள்ள 80 அடி இணைப்பு சாலையை வரதராஜன் மற்றும் அவரது சகோதரர்கள் ஆக்கிரமித்து கம்பிவேலி அமைத்து “கார் ஷெட்‘ அமைத்திருந்தனர். மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, கார் ஷெட்டை அகற்றி மக்கள் பயன்படுத்தும் வகையில் இணைப்புச் சாலைக்கு வழி ஏற்படுத்தினர். உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் கூறுகையில்,”” ஆக்கிரமிப்பாளர்கள் மீதான அதிரடி நடவடிக்கைகள் இன்னும் தீவிரப்படுத்தப்படும்,” என்றார்.