தினமணி 30.03.2010
வீடுகள், நபர்கள் குறித்த கணக்கெடுப்பு: ஒத்துழைப்பு அளிக்க ஆட்சியர் வேண்டுகோள்
நாகர்கோவில், மார்ச் 29: குமரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள வீடுகள் மற்றும் வீடுகளில் வசிப்போர் குறித்த கணக்கெடுப்புக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாட்டில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் நாட்டிலுள்ள மக்களை குறித்த பல புள்ளி விவரங்கள் கண்டறியப்பட்டு அவை அரசின் எல்லா திட்டங்களையும் வடிவமைக்கவும், நிறைவேற்றவும், திட்டமிடவும் இன்றியமையாததாக அமைந்துள்ளன.
இவ்வாறான கணக்கெடுப்பு நம் நாட்டில் 1881-ம் ஆண்டு முதல் தடையின்றி நடைபெற்று வருகிறது. 2011-ம் ஆண்டில் நாடு முழுவதும் தங்குதடையின்றி பிப்ரவரி மாதம் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
அதற்கு அடித்தளமாக அமையும் வகையில் நாடு முழுவதும் இவ்வாண்டு வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் இவ்வாறான வீடுகள் கணக்கெடுப்பு மாநிலம் முழுவதும் ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை மேற்கொள்ளப்படவுள்ளது.
நாட்டிலுள்ள அனைவருக்கும் பிரத்யேக அடையாள அட்டை வழங்கும் பொருட்டு நாட்டிலுள்ள அனைவரது விவரங்களை உள்ளடக்கிய தேசிய மக்கள் தொகை பதிவேடு ஒன்றை தயாரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்த பதிவேட்டை தயாரிப்பதில் முதற்கட்டமாக அனைத்து பொதுமக்களிடமிருந்து அவர்களை குறித்த விவரங்களை சேகரிக்கும்பணி வீடுகள் கணக்கெடுப்பு பணியில் மேற்கொள்ளப்படும். அதே நேரத்தில் தனி அட்டவணையில் சேகரிக்கப்படும்.
எனவே ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை கணக்கெடுப்பாளர்கள் மாநிலத்திலுள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று ஓர் அட்டவணையில் வீடுகள் குறித்தும் மற்றொரு அட்டவணையில் அவ்வீடுகளில் வசிக்கும் நபர்கள் குறித்தும் விவரங்களை சேகரிப்பார்கள்.
அப்பொழுது உங்கள் வீட்டுக்கு வரும் கணக்கெடுப்பாளர்கள் வீட்டிலுள்ள அனைவரது முழுப்பெயர், அவரவர் பிறந்த தேதி மற்றும் ஊர், அனைவரின் தாய், தந்தை மற்றும் துணைவர், துணைவியின் பெயர், தற்போதைய வசிக்கும் முகவரி மற்றும் நிரந்தர முகவரி ஆகிய விவரங்களை கோருவர். பல இடங்களில் சிலருக்கு மேற்கண்ட விவரங்கள் உடனே தெரியாமல் இருப்பது காணப்படுகிறது. சரியான பிறந்த தேதி, அஞ்சல் எண்ணுடன்கூடிய சரியான முகவரி மற்றும் தாய், தந்தை, துணைவரின் முழுமையான பெயர் ஆகியவற்றை சரியாக பதிவு செய்தால்தான், தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் உங்களை குறித்த விவரங்கள் சரியாக பதியப்படும்.
எனவே கணக்கெடுப்பாளர்கள் உங்கள் வீட்டுக்கு வரும் முன்னரே மேற்கண்ட விவரங்களை கண்டறிந்து, தயாராக எழுதி வைத்துக்கொண்டால் அவற்றை கேட்கும்போது வழங்க முடியும்.
எதிர்காலத்தில் நமது தேசத்தின் பாதுகாப்பை வலுவூட்டவும், பல்வேறு தருணங்களில் நம்மை அடையாளம் காண தேசிய மக்கள் தொகை பதிவேடும், பிரத்யேக அடையாள அட்டையும் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
எனவே இந்த திட்டம் நல்ல முறையில் நிறைவேற, மேற்கண்ட விவரங்களை தயாரித்து வைத்து, கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள வரும் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.