தினமணி 19.11.2010
வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன்: வீட்டு வசதி வாரியம் ஏற்பாடுதேனி, நவ. 18: நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் வசித்துவரும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வீடு கட்டுவதற்காக வீட்டு வசதி வாரியம் மூலம் வங்கிக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
÷இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:÷இந்தத் திட்டத்தில் மாத வருமானம் ரூ 5 ஆயிரம் வரை உள்ள பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு 25 சதுர மீட்டர் பரப்பளவில் வீடு கட்டுவதற்கு ரூ 1 லட்சம், ரூ 5 ஆயிரம் முதல் ரூ 10 ஆயிரம் வரையுள்ள வருவாய் பிரிவினருக்கு 40 சதுர மீட்டர் பரப்பளவில் வீடு கட்டுவதற்கு ரூ 1.6 லட்சம் வரை வங்கிக் கடன் வழங்கப்படுகிறது.
÷இந்தக் கடன் தொகையை 15 முதல் 20 ஆண்டுகளுக்குள் திரும்பச் செலுத்த வேண்டும். கடனுக்குரிய வட்டியில் 5 சதவீதம் மானியம் வழங்கப்படும். கூடுதல் கடன் தேவைப்படுபவர்களுக்கு தொகைக்கு ஏற்ப சாதாரண வட்டி வசூலிக்கப்படும். ÷சொந்த வீடு இல்லாதவர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். வீட்டுமனைப் பட்டா வைத்திருப்போர், அரசு இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றுள்ளவர்கள் இந்தத் திட்டத்தில் கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.÷மேலும் விவரங்களுக்கு, மதுரை எல்லீஸ் நகரில் உள்ள வீட்டு வசதிப் பிரிவு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் அலுவலகம், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களை பொதுமக்கள் அணுகலாம் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.