தினமணி 16.09.2010
வீடு தேடி வரும் பிறப்புச் சான்று
சேலம், செப். 15: சேலம் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பிறப்பு – இறப்பு சான்றிதழ்களை அவர்களது வீடுகளுக்கே தபால் மூலம் அனுப்பி வைக்கும் புதிய முறையை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது.
சேலம் மாநகராட்சியில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் காரணமாக பிறப்பு – இறப்பு சான்றிதழ் பெறுவதில் பொதுமக்களுக்கு தொடர்ந்து கால தாமதமும், வீண் செலவும் ஏற்பட்டு வருகிறது. இதற்காக அவ்வப்போது சிறப்பு முகாம்கள் நடத்தி பிறப்பு – இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
உரிய ஆவணங்களுடன் பிறப்பு – இறப்பு சான்றிதழ்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் முதல் சான்றிதழுக்கு | 7 கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதைத் தொடர்ந்து கூடுதலாகப் பெறும் ஒவ்வொரு சான்றிதழுக்கும் தலா | 5 செலுத்த வேண்டும்.
இவ்வாறு முறையாக விண்ணப்பித்த பிறகும் பல நாள்களுக்கு பிறகே சான்றிதழ்கள் கிடைத்து வந்தன. இதனால் பொதுமக்களுக்கு கால விரையமும், பண விரயமும் ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து பிறப்பு – இறப்பு சான்றிதழ்களை வீட்டிற்கே அனுப்பி வைக்கும் புதிய முறையை சேலம் மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. அதன்படி சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கும் போதே சுய முகவரியிட்ட | 5-க்கான தபால் தலை ஒட்டிய அஞ்சல் உறையையும் பொதுமக்கள் இணைத்துக் கொடுக்க வேண்டும். சான்றிதழ் தயாரானதும் அவை வீடுகளுக்கே அனுப்பி வைக்கப்படும். இந்த புதிய முறையானது கடந்த 4 நாள்களாக வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி ஆணையர் கே.எஸ்.பழனிச்சாமி தெரிவித்தார்.