தினமணி 15.04.2010
வீட்டுவரி விதிப்பு கோரி போராட்டம் நடத்தியவர்களுக்கு ஆணை வழங்கல்
போடி, ஏப். 13: மின் இணைப்பு பெறுவதற்காக வீட்டு வரி விதிப்பு கோரி போராட்டம் நடத்தியவர்களுக்கு அதற்கான ஆணை வழங்கப்பட்டது.
போடி நகராட்சி 1-வது வார்டு புதூரில் போயன்துறை ரோடு, வலசத்துறை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ரயில்வே, வக்பு வாரியம், நகராட்சி ஆகியவற்றிற்கு சொந்தமான நிலங்களில் 250-க்கும் அதிகமான குடும்பங்கள் ஆக்கிரமிப்பு செய்து வசித்து வருகின்றனர். இவர்களில் பலருக்கு பட்டா இல்லை. இதனால் வீட்டுவரி விதிப்பும் செய்யப்படவில்லை. இதனால் மின் இணைப்பும் பெற முடியவில்லை.
இந்த நிலையில் தமிழக அரசின் இலவச கலர் டி.வி. இவர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் அதை பயன்படுத்த முடியாததால் வீட்டு வரி விதிப்பு, பட்டா வழங்க கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை, டி.வி. பெட்டிகளை சாலையில் வைத்து கும்மியடித்தல், சாலை மறியல் ஆகிய போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இப்பகுதியில் நகராட்சி ஆணையர் க.சரவணக்குமார் மற்றும் நகரமைப்பு ஆய்வாளர் முருகானந்தம் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் 43 பேருக்கு வருவாய்த் துறை வீட்டுமனை பட்டா வழங்கியிருப்பது தெரியவந்தது. பட்டா வைத்துள்ள நபர்களுக்கு மட்டும் வீட்டுவரி விதிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் அந்த வீடுகள் அளவீடு செய்யப்பட்டு வீட்டு வரி விதிப்பு ஆணைகள் நகராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டது. இதனை பெற்றுக்கொண்ட பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்தனர்