தினமலர் 05.08.2010
வீட்டு குடிநீர் இணைப்பு கூடுதல் கட்டணத்தால் பொதுமக்கள் அதிருப்தி
ஆலங்குளம்,: கடந்த எட்டு ஆண்டுகளாக கிடப்பில் போட்பபட்ட ஆலங்குளம் டவுன் பஞ்., பகுதி வீட்டு குடிநீர் இணைப்பு திட்டம் தற்போது செயல்படுத்தப்படவுள்ள சூழலில் கூடுதல் கட்டண விவகாரம் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆலங்குளம் டவுன் பஞ்., பகுதியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 6 ஆயிரத்து 475 வீடுகள் உள்ளன. இங்கு வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கி 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதுவரை ஆயிரத்து 438 வீடுகளில் மட்டும் வீட்டு குடிநீர் இணைப்பு உள்ளது.இந்நிலையில் கடந்த 2002-ம் ஆண்டு அப்போதைய டவுன் பஞ்., நிர்வாகம் தக்கல் முறை என்ற திட்டத்தின் கீழ் 8 ஆயிரத்து 100 ரூபாய் கட்டணத்தில் 800 வீட்டு இணைப்புகள் வழங்க தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் ஏதோ காரணத்தால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது ஆலங்குளத்தில் 3 லட்சம் மற்றும் 2.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணி வரும் டிசம்பர் மாதம் முடிவடையும் என துணை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த இரண்டு மேல்நிலை தொட்டிகளும் செயல்பட ஆரம்பித்தால் ஆலங்குளம் நகருக்குள் நாள் ஒன்றுக்கு 8.5 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கலாம். இதனால் 5 ஆயிரம் வீட்டு குடிநீர் இணைப்புகள் வரை வழங்க முடியும். இதை தெரிந்து கொண்ட டவுன் பஞ்., நிர்வாகம் 8 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்ட குடிநீர் திட்டத்தை தற்போது கையில் எடுத்துள்ளது.
இதற்காக 57 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை குடிநீர் வடிகால் வாரியத்திற்கு டவுன் பஞ்., நிர்வாகம் கட்ட வேண்டும். இத்தொகையை குடிநீர் இணைப்பு வேண்டுவோரிடம் வசூல் செய்ய மன்றத்தில் தீர்மானம் வைக்கப்பட்டது. இதனால்தான் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.இதுகுறித்து கவுன்சிலர் தங்கசெல்வம் கூறியதாவது:-
“”டவுன் பஞ்., கூட்டத்தில் வைக்கப்பட்ட தீர்மானத்தில் பொதுமக்களிடம் வசூல் செய்ய உள்ள கட்டணம் எவ்வளவு என்பதை குறிப்பிடவில்லை. இதுகுறித்து நான் கேட்ட போது முன்பு தக்கல் முறையில் நிர்ணயிக்கப்பட்ட 8 ஆயிரத்து 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என தலைவர் தெரிவித்தார்.ஆனால் தக்கல் முறை கட்டணத்தை குறைத்து சுரண்டை, கீழப்பாவூர் டவுன் பஞ்.,களில் குடிநீர் இணைப்பு வழங்கியதை சுட்டிக்காட்டி நானும் கவுன்சிலர்கள் மோகன்ராஜ், ராஜதுரை, தங்கரத்தினம் ஆகியோர் வாதிட்டோம். ஆனால் கட்டணத்தை குறைக்க முடியாது என தலைவர் கூறிவிட்டார்.தற்போது குறைந்தது 2 ஆயிரத்து 500 இணைப்புகளாவது வழங்கப்படும். இதற்கு 8 ஆயிரத்து 100 ரூபாய் வசூலித்தால் 2 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகும். அரசுக்கு கட்ட வேண்டியது 57 லட்சம் ரூபாய்தான். மீதி 1.4 கோடி ரூபாய் பொது நிதியில் சேர்ந்து விடும். இந்த பணத்தில் ரோடு போடுகிறோம், கட்டடம் கட்டுகிறோம் என கூறி லாபம் பார்க்க சிலர் இப்போதே தயாராகிவிட்டனர்.2 ஆயிரம் ரூபாய் வசூலித்தாலே அரசுக்கு கட்ட வேண்டிய பணம் கிடைத்துவிடும். நாங்கள் 4 ஆயிரம் வாங்குங்கள் எனதான் போராடுகிறோம்” என்றார்.பொதுமக்கள் தரப்பில் மேஜர் ரவிக்குமார் கூறியதாவது:-“”இந்த தக்கல் முறை என்பதே ஆலங்குளம் பொதுமக்களை ஏமாற்ற அப்போதைய டவுன் பஞ்., நிர்வாகம் கொண்டு வந்தது தான். 800 வீட்டு குடிநீர் இணைப்பிற்கு அனுமதி வாங்கி மோசை என்ற ஒரே ஒருவருக்கு மட்டும் அப்போது இணைப்பு வழங்கினர். மீதி 799 இணைப்புகள் வழங்க நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே 8 ஆயிரத்து 100 ரூபாய் கட்ட வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. நிர்வாகம் நினைத்தால் குறைக்கலாம். ஏழை மக்களின் நலன் கருதி கட்டணத்தை கண்டிப்பாக குறைக்க வேண்டும்” என்றார்.இப்பிரச்னை குறித்து டவுன் பஞ்., தலைவர் சொக்கலிங்கத்திடம் கேட்டபோது :-
“”வீட்டு குடிநீர் இணைப்பு வழங்க 8 ஆயிரத்து 100 ரூபாய் வசூலிப்பது என முன்பிருந்த மன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை குறைக்க இந்த மன்றத்திற்கு அதிகாரம் இல்லை. 8 ஆயிரத்து 100 ரூபாய் கட்ட மக்கள் தயாராக உள்ளனர்” என்றார்.12 ஆண்டுகளாக காத்திருக்கும் ஆலங்குளம் மக்களுக்கு கட்டண குறைப்புடன் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கினால் மகிழ்ச்சியடைவார்கள்.