தினமலர் 20.04.2010
வீதி நாடகத்தில் வெளிப்பட்ட விதி மாற்றும் சுகாதார ‘பாடங்கள்‘
கோத்தகிரி: கோத்தகிரியில் அருவங்காடு கிராமிய அபிவிருத்தி இயக்கம் சார்பில், சுகாதார விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் வீட்டுக்கு ஒரு கழிவறை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த விதைகள் கலைக்குழு உறுப்பினர்கள் களம் இறங்கி உள்ளனர். அதன் இயக்குனர் முத்துசாமி தலைமையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி மக்களுக்கு பொது சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலர் ஆசிரியர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில், ”உலக அளவில் ஒரு லட்சத்திற்கு 35 ஆயிரம் குழந்தைகள் ஒரு ஆண்டு அடைவதற்கு முன்பே மரணத்தை தழுவுகின்றனர். அவற்றில் ஐந்தில் மூன்று பேர் இந்திய குழந்தைகள் என்பது வேதனை அளிக்கிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் நிமோனியா, பேதி போன்ற நோய்களுக்கு முக்கிய காரணம், மக்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு இல்லாததுதான். மலம் கழித்தப்பின் கைகளை சோப்பு போட்டு கழுவும் பழக்கம் மட்டும் இருந்தால் இறந்துபோகும் குழந்தைகளின் பாதி பேரை காப்பாற்ற முடியும்.
மலம் கழித்தப்பின் சாதாரணமாக கை கழுவும் போது, கையில் உள்ள ஒரு எண்ணெய் பசையில் மலத்துகள் ஒட்டிக் கொண்டிருக்கும். ஒரு கிராம் மலத்துகளில் சுமார் பத்து லட்சம் வைரஸ்களும், ஒரு லட்சம் பாக்டீரியாக்களும் இருக்கும். பல நோய்கள் பரவ இவைதான் காரணம். கைகளை சோப்பு போட்டு கழுவும் போது கிருமிகளுக்கும் நோய்களுக்கும் இடையில் உள்ள சங்கிலி அறுப்பட்டு நோய் பரவாது. ஆகையால், மலம் கழித்தப்பின் கைகளை சோப்பு போட்டு இருபது வினாடிகள் கழுவுவது முக்கியம். நமது மக்களிடையே ஏற்படும் நோய்களுக்கு முக்கிய காரணம், திறந்த வெளியில் மலம் கழிப்பதுதான். எனவே, வீட்டுக்கொரு கழிவறை என்ற லட்சியத்தை ஒவ்வொருவரும் மேற்கொள்ளவேண்டும்,” என்றார்.
கிராமிய அபிவிருத்தி இயக்கத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜன் பேசுகையில்,”சுகாதார கழிப்பறை திட்டத்தின் மூலம் மனித மலத்தை உரமாக்கி அதன் மூலம் ஆண்டுக்கு 2.50 லட்சம் ரூபாய் வரை பணம் சம்பாதிக்கலாம். மலத்தின் மீது சாம்பல், மணல் மற்றும் மரத்தூள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை போட்டு மலத்தை மூடிவிட்டால் அது சிறந்த த்ரமாக மாறும்,” என்றார். கோத்தகிரி மார்க்கெட் திடலில் நடந்த நிகழ்ச்சிக்கு தே.மு.தி.க., தலைமை கழக பேச்சாளர் சத்தியசீலன் தலைமை வகித்தார். கலைக்குழு மேலாளர் செந்தில்குமார், உறுப்பினர்கள் வின்சென்ட், பெருமாள், முருகேசன், சுப்பிரமணி மற்றும் சித்ரா ஆகியோர் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். செல்வகுமார் நன்றி கூறினார்.