தினமணி 01.04.2010
வெயில் காலத்தில் குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்க என்ன நடவடிக்கை?
திருச்சி, மார்ச் 31: வெயில் காலத்தில் குடிநீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்க மாநகராட்சி நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? என திருச்சி மாமன்றத்தில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து நடைபெற்று வரும் குடிநீர் மேம்பாட்டுத் திட்டப் பணிகளின் குழாயின் தரம் குறித்தும் அவர்கள் சந்தேகம் எழுப்பினர்.
திருச்சி மாமன்றத்தின் அவசரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் எஸ். சுஜாதா தலைமை வகித்தார். ஆணையர் த.தி. பால்சாமி, துணை மேயர் மு. அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
அ. ஜோசப் ஜெரால்டு (தேமுதிக): வெயில் காலம் தொடங்கிவிட்டது. இப்போதே குடிநீர்த் தொட்டிகளில் தண்ணீர் ஏற்றும் வேகத்தில் தடை ஏற்படுகிறது. லாரிகளில் விநியோகம் செய்யவும் ஓட்டுநர்கள் பற்றாக்குறை. குடிநீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்க மாநகராட்சி நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?
ரெ. ஸ்ரீராமன் (இந்திய கம்யூ.): குடிநீர் எடுக்கப்படும் கம்பரசம்பேட்டை பகுதி மாநகர எல்லைக்குள் வரவில்லை. கிராமப் பகுதிகளுக்கு 4 மணி நேரம் மின் தடை. குடிநீர் எடுப்பதில் சிக்கல் வராதா?
ரெ. அறிவுடைநம்பி (திமுக): மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏறும் நேரமே தாமதமாகிறது. மருத்துவமனை சாலையில் இன்று குடிநீர் வழங்கப்படவே இல்லை.
செயற்பொறியாளர் சந்திரன்: நீரேற்றும் தொட்டிகளுக்கான இயந்திரங்களை இயக்க ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. ஜீயபுரத்தில் மட்டும்தான் ஜெனரேட்டர் இல்லை. அங்கும் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் விநியோகத்துக்காக தனி மின் இணைப்பு வாங்கப்பட்டுள்ளது. மின் தடை ஏற்படாது. இதில் மாதாந்திர பராமரிப்புப் பணியின் போது மட்டுமே தடை ஏற்படும்.
ஆணையர் பால்சாமி: குடிநீர் பிரச்னை குறித்து ஆய்வு செய்ய தனிக் கூட்டம் நடத்தி, மாமன்ற உறுப்பினர்களிடம் ஆலோசனை பெறப்படும்.
குடிநீர்க் குழாயின் தரம்?
மு. வெங்கட்ராஜ் (சுயே.): தற்போது பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ. 169 கோடி குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தில் குழாய்களின் தரம் குறைவாக இருக்கிறது. பொன்மலைக் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைப் போல ஆகிவிடப் போகிறது. ஜோசப் ஜெரால்டு (தேமுதிக): குழாயின் தரம் குறைவாக இருந்தால், அதுகுறித்து யாரிடம் புகார் தெரிவிக்கலாம்? மொத்தக் கொள்முதல் செய்யும் போது, அந்த நிறுவனத்தில் உள்ள குழாய்களை சோதனை செய்வோம். இங்கு வந்து இறங்கும் குழாய்களையும் சோதனை செய்கிறோமா?
செயற்பொறியாளர் சந்திரன்: நிறுவனங்களிலேயே பரிசோதனை செய்யப்பட்டு, சீலிடப்பட்ட குழாய்கள்தான் இங்கு இறக்கப்படுகின்றன. பணிகள் முடிந்தும் 75 சதம் நிதிதான் ஒப்பந்ததாரக்களுக்கு வழங்கப்படுகிறது. மீதமுள்ள 25 சதப் பணம் திட்டத்தைச் செயல்படுத்திப் பார்த்த பிறகுதான் வழங்கப்படுகிறது. ஆணையர் பால்சாமி: 4 முகமைகளில் இருந்து குழாய்கள் சோதனை செய்யப்படுகின்றன. எனவே, தவறு நடக்க வாய்ப்பே இல்லை. உறுப்பினர்கள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால், சோதனை செய்த முகமைகளிடம் விளக்கம் கேட்டுப் பெறப்படும்.
மாமன்ற உறுப்பினர்கள் கவிதா, பாலமுருகன் ஆகியோர் தங்களது வார்டுகளில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்துக்கான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளைக் கட்ட பூமிபூஜை போட்டதற்குப் பிறகு, இதுவரை பணிகள் தொடங்கவில்லை எனக் குறிப்பிட்டனர்.