தினமலர் 29.01.2010
வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் நாகை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
நாகை: கொசு மருந்து அடிக்க வேண்டும், வேகத்தடை அமைக்க வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.நாகை நகராட்சிக்கூட்டம் தலைவர் சந்திரமோகன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் மாரிமுத்து, ஆணையர் சிவக்குமார் மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் நடந்த விவாதம்:சாகுல்ஹமீது ராஜா: நகராட்சி சார்பில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கடற்கரையில் பூங்கா மற்றும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு பராமரிப்பு இல்லாமல் வீணாகிவிட்டது. நகராட்சிப்பணியாளர்கள் ஏன் பூங்காவை பராமரிக்கவில்லை. பல மாதமாக கொசுக்களை ஒழிக்க தெரிவித்தும் பயனில்லை. சமீபகாலமாக டவுனில் நடந்து சென்றால் கூட கொசுக்கள் கடிக்கிறது. கொசு மருந்து அடிக்கிறீர்களா? இல்லையா?
ஆணையர்: நகராட்சியில் 4 கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் தான் உள்ளது. கூடுலாக கொசு மருந்து அடிக்க இயந்திரம் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரப்பணியாளர்களும் பற்றாக்குறையாக உள்ளதால் வார்டு வாரியாக கொசு மருந்து அடிக்க தெரிவித்துள்ளோம்.தலைவர்: சுகாதாரப்பணிகள் மற்றும் கொசுக்களை கட்டுப்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.ஜோதிராமன்: நகரில் அதிவேகமாக செல்லும் ஆட்டோக்களை கட்டுப்படுத்தவும், முக்கியமாக 13 இடங்களில் வேகத்தடை அமைக்கவும் பல கூட்டங்களில் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். கவுதமன்: சமீபத்தில் மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங்சவ்கான் வந்தபோது நகரில் இருந்து ஒரு சில வேகத்தடைகளையும் அதிகாரிகள் அகற்றிவிட்டனர்.
இதனால் ஆட்டோக்களும், பைக்குகளும் அதிவேகமாக செல்கின்றன.தலைவர்: நகராட்சி அதிகாரிகளின் செயல்பாடு எனக்கே வருத்தமாகத்தான் உள்ளது. குடியரசு தினவிழாவிற்கு நான் வந்தும் பல அதிகாரிகள் வரவில்லை.துணைத்தலைவர்: நகராட்சி பணிகளை முறையாக செயல்படுத்தாத அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது தலைவர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். ஒப்பந்தக்காரர்களின் பில்லை விரைவில் அதிகாரிகள் பாஸ் செய்தால் தான் நகராட்சி பணிகளை ஒப்பந்தக்காரர்களும் விரைந்து முடிக்க வசதியாக இருக்கும்.தலைவர்: நானும், ஆணையரும் சேர்ந்து தவறு செய்யும் பணியாளரை கண்டித்தால் அவருக்கு ஆதரவாக கவுன்சிலர்கள் வருகின்றனர். இப்படி இருந்தால் எப்படி பணியாளர்களை கண்டிக்க முடியும். பரணிக்குமார்: எனது வார்டில் 100க்கும் அதிகமான மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க சர்வே எடுக்கப்பட்டு பல ஆண்டுகளாகிறது.
எப்போது இலவச பட்டா வழங்குவீர்கள். கோடைக்காலம் தொடங்குவதால் நகரில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அவசர நடவடிக்கை எடுக்கவேண்டும்.ஜோதிராமன்: நகராட்சி சார்பில் ரூபாய் பல லட்சம் மதிப்பீட்டில் மின்சார சுடுகாடு கட்டப்பட்டு வீணாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் எங்களை திட்டுகின்றனர். மின்சார சுடுகாட்டின் நிலை என்ன?.சசிக்குமார்: எனது வார்டில் வாக்காளர் கணக்கெடுப்பு பணி நடப்பது பற்றி நகராட்சி அலுவலகத்தில் விசாரித்தபோது பணியாளர் ஒருவர் கவுன்சிலருக்கு தெரிவிக்கவேண்டியதில்லை என்று பொறுப்பற்ற முறையில் பதில் கூறுகிறார். ஆணையர்: கவுன்சிலர்களின் கேள்விக்கு பணியாளர்கள் முறையாக பதில் கூறவேண்டும். இனிமேல் பணியாளர்கள் தவறு செய்யமாட்டார்கள். பணியாளரின் தவறுக்கு நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.