தினமணி 08.04.2010
வேதிப் பொருள் கலந்த சீன மிட்டாய்கள் பறிமுதல்
வேதாரண்யம், ஏப். 7: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்பட்ட வேதிப் பொருள் கலக்கப்பட்ட சீன மிட்டாய்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
சீனாவில் தயாரிக்கப்படும் இந்த மிட்டாய்கள் வேதாரண்யம் பகுதியில் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக பொது சுகாதாரத் துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, இப் பகுதியில் உள்ள 46 கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சீனத் தயாரிப்பிலான மிட்டாய்கள் சிக்கின.
இந்த மிட்டாய்கள் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு வித போதை போன்ற தடை செய்யப்பட்ட வேதிப் பொருள் சேர்க்கப்படுவதால் அது மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று அஞ்சப்படுகிறது. எனவே, இந்த மிட்டாய் விற்பனை செய்வது தெரிய வந்தால், வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
இந்த ஆய்வின் போது உணவு ஆய்வாளர்கள் க.கோதண்டபாணி, நா.பிச்சமுத்து, சுகாதார ஆய்வாளர்கள் மீனாட்சி சுந்தரம், பிச்சமுத்து , அழகிரிபாலன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.