தினத்தந்தி 11.12.2013
வேலூர் பகுதிகளில் மாநகராட்சி மேயர், கமிஷனர் திடீர் ஆய்வு ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு
வேலூர்
மாநகராட்சி பகுதிகளில் மேயர் கார்த்தியாயினி, கமிஷனர் ஜானகி ஆகியோர்
திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற
அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேயர் திடீர் ஆய்வு
வேலூர் மாநகராட்சி பகுதியான 16 மற்றும் 30–வது வார்டுகளில் கால்வாய்
பிரச்சினை, குடிநீர் பிரச்சினை, சாலை வசதி போன்றவை குறித்து பொதுமக்கள்
மற்றும் அந்த பகுதி கவுன்சிலர்கள் மேயர் கார்த்தியாயினி, கமிஷனர் ஜானகி
ஆகியோருக்கு புகார்கள் கொடுத்தனர்.
அதன்படி நேற்று மாலை மேயர் கார்த்தியாயினி, கமிஷனர் ஜானகி ஆகியோர்
நேற்று திடீரென அந்த பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது துணைமேயர்
வி.டி.தருமலிங்கம், நகரமைப்பு அலுவலர் கண்ணன், நகர்நல அலுவலர்
வசந்த்திவாகர், கட்டிட ஆய்வாளர் மதிவாணன், கவுன்சிலர்கள் தாமோதரன்,
அன்வர்பாஷா உள்பட மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.
16–வது வார்டான காகிதப்பட்டரை ஆற்காடு சாலை, நைனியப்பன் நாய்க்கர் தெரு,
கானாறு, சைதாப்பேட்டை கன்னாரத்தெரு ஆகிய பகுதிகளில் மேயர், கமிஷனர்
பார்வையிட்டனர். மேலும் காகிதப்பட்டறையில் மலையில் இருந்து வரும்
மழைநீர்வடிகால் கால்வாய் ஆகியவற்றை பார்வையிட்டனர். அந்த பகுதிகளில்
கால்வாய் வசதி இல்லாமல் உள்ளதாகவும் அதனை சீரமைக்கவும் அவர்கள்
உத்தரவிட்டனர்.
ஆக்கிரமிப்புகள்
அதைத்தொடர்ந்து 30–வது வார்டு பழைய முன்சீப் கோர்ட்டு தெரு, கானாறு,
பி.டி.சி.ரோடு, சின்ன மராட்டா தெரு ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு கால்வாய் கட்டும் பணியையும், சின்னமராட்டா தெருவில் ரூ.35
லட்சம் செலவில் மாநகராட்சி சார்பில் சமுதாய கூடம் கட்டப்படுவதையும்
பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதைத்தொடர்ந்து கால்வாய்களை தூர்வாரவும், பி.டி.சி. ரோட்டில் சாலையில்
ஆக்கிரமித்து மரப்பலகைகள், கதவுகள் வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை உடனடியாக
அப்புறப்படுத்த வேண்டும் என்றும், இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவும்
மேயர் கார்த்தியாயினி உத்தரவிட்டார்.
குடிநீர் பிரச்சினை
ஆய்வின்போது மேயர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது
குடிநீர் பிரச்சினை அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். அதற்கு மேயர்
கூறுகையில், மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கூட்டு குடிநீர் திட்டம்
வருகிற செப்டம்பர் மாதம் 9–ந் தேதி வெள்ளோட்டம் பார்ப்பதற்கான பணிகள்
நடைபெற்று வருகிறது. விரைவில் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும் என்றார்.