வேலூர் பகுதியில் அம்மா உணவகத்தில் கூட்டம் அலைமோதியது ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது
வேலூர் மாநகராட்சி பகுதியில் திறக்கப்பட்ட 10 அம்மா உணவகங்களிலும் நேற்று கூட்டம் அலைமோதியது. காலை இட்லி ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது. பகலில் 2 மணி நேரத்தில் சாம்பார் சாதம், தயிர்சாதம் விற்று தீர்ந்தது.
அம்மா உணவகங்கள்
வேலூர் மாநகராட்சியில் வேலூர் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகிலும், கொசப்பேட்டை மார்க்கெட் பள்ளி அருகிலும், கஸ்பா நெடுந்தெரு, விருபாட்சிபுரம் பழைய வணிக வளாகம் பின்புறம், பாகாயம் பள்ளி அருகிலும், சத்துவாச்சாரி பீடி தொழிலாளர் குடியிருப்பு, கலெக்டர் அலுவலகம் எதிரில், அலமேலு மங்காபுரம், காந்திநகர், பாரதிநகர் என 10 இடங்களில் அம்மா உணவகங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று முன்தினம் மாலை வீடியோ கான்பிரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.அம்மா மலிவு விலை உணவகங்களில் காலை 7 மணி முதல் 10 மணிவரை ஒரு ரூபாய்க்கு இட்லியும் மதியம் 12 மணிமுதல் 3 மணிவரை ரூ.5க்கு சாம்பார் சாதம், ரூ.3க்கு தயிர் சாதம் விற்பனை செய்யப்படுகிறது.
அம்மா உணவங்களை முதல்– அமைச்சர் தொடங்கி வைத்த உடன் சாம்பார் சாதம் தயிர் சாதம் விற்பனை நேற்று முன்தினம் தொடங்கியது. மாநகராட்சியில் உள்ள 10 மையங்களிலும் கூட்டம் அலை மோதியது. நேற்று முன்தினம் மட்டும் சாம்பார் சாதம், தயிர் சாதத்துக்கு ரூ.16 ஆயிரத்து 221 வசூல் ஆனது.
கூட்டம் அலைமோதியது
நேற்று காலை அனைத்து அம்மா உணவகங்களிலும் தலா 30 கிலோ அரிசி மாவுடன் இட்லி தயார் செய்யப்பட்டு இருந்தது. 10 உணவகங்களிலும் நேற்று காலை 7 மணிக்கு டோக்கன் பெற கூட்டம் அலைமோதியது. டோக்கன் வழங்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் அனைத்து இட்லிகளும் விற்று தீர்ந்தன.எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே 40 நிமிடங்களில் இட்லி விற்று தீர்ந்தது. பொதுமக்கள் பலர் இட்லி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.அதேபோல் பகல் 12 மணிக்கு மதிய உணவுக்காக திறக்கப்பட்டதும், பொதுமக்கள் உள்ளே திமு, திமுவென புகுந்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அங்குள்ள தடுப்பு கம்பிகள் உடைந்தது. பின்னர் தெற்கு போலீசார் அங்கு சென்று கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.அங்கு ஒரு மணி நேரத்தில் சாம்பார் சாதம், தயிர் சாதம் விற்று தீர்த்தது. மற்ற இடங்களில் பகல் 2 மணிக்கு அனைத்தும் விற்று தீர்ந்தது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.இதுகுறித்து கமிஷனர் ஜானகி கூறுகையில், ‘ஒரு வாரம் விற்பனையாகும் அளவை பொறுத்து அதிக இட்லி, தயிர் சாதம், சாம்பார் சாதம் தயார் செய்யப்படும். ஒரு வாரத்துக்கு பின்னர் அம்மா உணவகங்களில் குறிப்பிட்ட நேரம் வரை உணவு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். பின்னர் பற்றாக்குறை இருக்காது‘ என்றார்.
பொதுமக்கள் மகிழ்ச்சி
வேலூரில் அம்மா உணவகங்கள் திறப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், அனைத்து உணவகங்களிலும் அமோக வரவேற்பு அளித்துள்ளனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘குறைந்த விலையில் இவ்வாறு தரமாக சுவையாக கிடைக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து அம்மா உணவகங்களை நடத்தவேண்டும். மலிவு உணவில் உணவு கிடைப்பதால் இனி வேலூரில் யாரும் பட்டினியோடு இருக்க மாட்டார்கள் ஏழை எளியவருக்கும் உணவு கிடைத்து விடும். இட்லி சுவையாகவும் தரமாகவும் உள்ளது. தொடர்ந்து இதே நிலையை கடைபிடிக்க வேண்டும். கூடுதலாக அம்மா உணவகங்களை திறக்க வேண்டும்‘ என்றனர்.அம்மா உணவகம் திறந்ததால் வேலூரில் சிறிய ஓட்டல்கள், தள்ளுவண்டிகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.