தினகரன் 20.08.2010
வேலூர் மாநகராட்சி எல்லை மாறுகிறது
வேலூர், ஆக.20: ‘வேலூர் மாநகராட்சி எல்லை மாற்றப்படலாம்’ என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். காட்பாடி ஒன்றியம், சேவூர் ஊராட்சியில் நூலக கட்டடம் திறப்புவிழா நேற்று மாலை நடந்தது. ஊராட்சி தலைவர் மாதவன் வரவேற்றார். ஒன்றியக்குழு தலைவர் பிரமிளா தயாநிதி முன்னிலை வகித்தார்.
முன்னாள் எம்.பி. முகமதுசகி, மாவட்ட ஊராட்சி தலைவர் ஷீலாராஜன், வட்டார கல்விக்குழு தலைவர் தயாநிதி, மாவட்ட கவுன்சிலர் எஸ்.தணிகாசலம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நூலக கட்டடத்தை திறந்துவைத்து சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியது:
சேவூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். மேலும் இந்த கிராமத்தில் ரிசர்வ் போலீஸ் மையம் வர இருக்கிறது.
பெண்கள் முன்னேற்றத்துக்கு மகளிர் குழு பெரிய உதவி செய்துள்ளது. இங்கு நிறைய மகளிர் குழுவினர் வந்திருக்கிறீர்கள். அதில் ஒருவர் என்னிடம் வந்து மகளிர் குழுவுக்கு கடன் வழங்கவில்லை என்றார். அதனால் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள மகளிர் குழுவினரையும் சந்திக்க முடிவு செய்துள்ளது. அப்போது அவர்களது குறைகள் என்ன? கடன் கிடைக்கவில்லையா? என்பது பற்றி கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
கான்கிரீட் வீடு கட்டித்தரும் திட்டத்துக்கு மாநகராட்சியில் இணைய இருக்கும் பகுதியில் உள்ள குடிசை வீடுகளை கணக்கெடுக்கப்படவில்லை. இதுபற்றி துணை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கூறினேன். அவரும் மாநகராட்சி பகுதிகளில் கணக்கெடுக்க சம்மதித்திருக்கிறார். அதன் பிறகு மாநகராட்சியில் இணைய இருக்கும் பகுதிகளில் உள்ள குடிசை வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
வேலூர் மாநகராட்சி எல்லையை மாற்றி அமைப்பது பற்றி அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள். அதனால் தற்போது இருக்கும் சில ஊராட்சிகள் மாநகராட்சியோடு சேரவும், சில ஊராட்சிகள் அப்படியே ஊராட்சியாக இயங்கவும் வாய்ப்புள்ளது. இதனால் காட்பாடி தொகுதியில் உள்ள சில ஊராட்சிகள் மாநகராட்சி எல்லையில் இருந்து தப்பிக்கும் என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் அரிகிருஷ்ணன், உறுப்பினர் என்.ஐயப்பன், தாசில்தார் ரேணு, பி.டி.ஓ.க்கள் பானுமதி, சேகர், ஊராட்சி துணைத்தலைவர் சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.