தினமலர் 05.02.2010
வேலூர் மாவட்டத்தில் கொசு ஒழிக்க நடவடிக்கை: கலெக்டர்
வேலூர்: “வேலூர் மாடட்டத்தில் நோய் பரப்பும் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது‘ என கலெக்டர் ராஜேந்திரன் தெரிவித்தார். அவர் வெளியிட்ட அறிக்கை: வேலூர் மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில் தீவிர கொசு ஒழிப்பு பணி கொசு இல்லாத வட்டாரம் என்ற திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. முதல் கட்டமாக திமிரி வட்டாரத்தில் சோதனை முறையில் மூன்று மாதங்களுக்கு கொசு ஒழிப்பு பணி செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 28 மாவட்டங்களில் 28 வட்டாரங்களில் இந்த பணி சோதனை முறையில் அமுல்படுத்தப்படும். இதன் முடிவுகளைப் பொறுத்து அனைத்து வட்டார அளவில் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பருவ நிலை மாறுதல்களால் நோய் பரப்பும் கொசு உற்பத்தியாகி, டெங்கு, சிக்கன் குனியா, மூளைக் காய்ச்சல் போன்றவை அதிகமாக காணப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் 2006ம் ஆண்டு முதலில் சிக்கன் குனியா நோய் பாதிப்பு ஏற்பட்டு 10,000 மேற்பட்டோர் பாதிப்படைந்தனர். மாவட்ட எல்லையோர கிராமங்களில் போர்க்கால தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக நோயின் தாக்கம் பெருமளவில் குறைக்கப்பட்டது. தற்போது டெங்கு, சிக்கன் குனியா நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பத்திரிக்கை துறை, ஊடகங்கள் மற்றும் மக்கள் பிரநிதிகளுக்கு விளக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கிராமப் பகதிகளில் கடந்த அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரை வட்டாரம் தோறும் 10 தற்காலிக பணியாளர்கள் வீதம் 20 வட்டாரங்களில் 200க்கும் மேற்பட்டோர் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு கொசு உற்பத்தியை தடுத்துள்ளனர். அவர்களுக்கு நடப்பு ஆண்டிலும் பணி நிடிப்பு செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சத்துக்கு குறைவான மக்கள் தொகை உள்ள நகராட்சி பகுதிகளில் தற்போது தீவிர கொசு ஒழிப்பு பணி செய்ய உள்ளார்கள். சுகாதாரத்துறை செயல்படுத்தும் நகர் பகுதிகளில் ஆயிரம் பேருக்கு ஒருவர் என்ற வீதம் தற்காலிக பணியாளர்கள் மூன்று மாதத்துக்கு நியமிக்கப்பட உள்ளனர்.