தினமணி 12.02.2010
வைகை அணையில் இருந்து திண்டுக்கல்லுக்கு குடிநீர் கொண்டுவர ஆய்வு
திண்டுக்கல், பிப்.11: திண்டுக்கல் நகரில் குடிநீர் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் வைகை அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்பட்டு வருகிறது. இது குறித்து திண்டுக்கல் நகர்மன்றத் தலைவர் ஆர்.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நகரில் பாதாள சாக்கடைகள் அமைக்கும் பணிகளுக்காக பல்வேறு சாலைகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் நலன் கருதி சாலைகளை உடனே சீரமைக்கத் திட்டங்களைத் தயாரித்து வருவாய்த் துறை அமைச்சர் இ.பெரியசாமி, துணை முதல்வரை நேரில் சந்தித்து இப்பணிகள் பற்றிய அவசியத்தை வலியுறுத்தினார். துணை முதல்வரும் இப்பணிகளின் அவசியத்தை ஏற்று நகராட்சிகளின் தலைமைப் பொறியாளரை திண்டுக்கல் நகருக்கு அனுப்பி வைத்தார்.
அவரும் பணிகளை ஆய்வு செய்து சென்றுள்ளார். இப்பணிகளுக்காகத் திண்டுக்கல் நகராட்சிக்கு விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இப்பணிகளை மேற்கொள்ள அமைச்சர் இ.பெரியசாமி முயற்சியால் திண்டுக்கல் நகராட்சிக்கு அரசு சிறப்பு நிதி அளித்துள்ளது. முக்கிய சாலைகளின் சீரமைப்புப் பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளன. பிற சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் நகரில் குடிநீர் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் வைகை அணையில் இருந்து நேரடியாக 26 கி.மீ. தூரம் தனிக்குழாய்கள் அமைத்து நிலக்கோட்டை அருகே உள்ள பேரணைக்கு வைகை நீரைக் கொண்டு வந்து அங்கிருந்து திண்டுக்கல் நகர், ஆத்தூர், நிலக்கோட்டை, வத்தலகுண்டு ஆகிய பகுதிகளுக்கு ஒரே சீரான குடிநீர் விநியோகிப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு முதல்வரின் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமன்றத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியக் கோரிக்கையில் இத் திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இத் திட்டத்தினை நிறைவேற்றுவதற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத் திட்டம் நிறைவேறும்போது திண்டுக்கல் நகரில் தினந்தோறும் குடிநீர் விநியோகம் ஒரே சீராக அமையும். நிலைமை இவ்வாறு இருக்க இதற்கான போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், மறியல்கள் அவசியமற்றது. மேலும் கொசு ஒழிப்புக்காக நகராட்சி சார்பில் வாங்கப்பட்ட நவீன கருவிகள் மூலம் தினந்தோறும் எல்லா பகுதிகளிலும் சுழற்சி முறையில் புகை தெளிக்கப்பட்டு வருகிறது. கம்ப்ரசர் மூலம் மருந்து அடிக்கப்பட்டு வருகிறது என நகர்மன்றத் தலைவர் ஆர். நடராஜன் தெரிவித்துள்ளார்.