மாலை மலர் 02.03.2010
வைகை ஆற்றில் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும்; மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை
மதுரை, மார்ச். 2- மதுரை மாநகராட்சியின் வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 1 முதல் 21 வரையிலான வார்டு பொதுமக்களின் குறைதீர்க்கும் நிகழ்ச்சி மேயர் தேன்மொழி தலைமையில் ஆணையாளர் செபாஸ்டின் முன்னிலையில் இன்று காலை மாநகராட்சி கல்தூண் மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆக்கிரமிப்பு அகற்றுதல், பாதாள சாக்கடை இணைப்பு வழங்க கோருதல், குடிநீர் மற்றும் சாக்கடை அடிப்படை வசதிகள் குறித்து 20-க்கும் மேற்பட்ட மனுக்கள் பொது மக்கள் சார்பாக மேயரிடம் வழங்கப்பட்டன. மேயர் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக செல்லூர் பகுதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் காய்கறி மார்க்கெட் 85 சதவீத கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு ஏப்ரல் முதல் வாரத்தில் திறந்து வைக்கப்படும். தொடர்ந்து மாநகராட்சி லாரிகள் நிறுத்துமிடத்தினை பார்வையிட்டு பழுதடைந்துள்ள குப்பை மற்றும் குடிநீர் லாரிகளை உடனடியாக பழுது நீக்கம் செய்யுமாறு தெரிவித்தார்.
வைகை ஆற்றினை பார்வையிட்ட கமிஷனர் செபாஸ்டின் கூறும்போது, வைகை ஆறு தற்போது சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. வைகை ஆற்றின் கரையோரங்களில் குப்பைகள் மற்றும் கழிவு நீரினை கொட்டி ஆற்றினை மாசுப்படுத்துவோர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு, சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் மாடுகளை திரியவிடுபவர்கள் மீதும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். கோடைக்காலத்தில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் பழுதடைந்துள்ள லாரிகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சரிசெய்து சீரான முறையில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் மண்டலத்தலைவர் இசக்கிமுத்து, தலைமை பொறியாளர் சக்திவேல், முதன்மை நகரமைப்பு அலுவலர் முருகேசன், உதவி ஆணையாளர் (வருவாய்) பாஸ்கரன், உதவி ஆணையாளர் (வடக்கு) ராஜகாந்தி, நிர்வாக பொறி யாளர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.