தினமலர் 19.04.2010
வைகை ஆற்றோர கடைகளில் வரி வசூலிக்க தடை : பேரூராட்சி நிர்வாகம்
மானாமதுரை : சித்திரை திருவிழாவின் போது, வைகை ஆற்றிற்குள் கடை வைத்திருப்போரிடம், வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மானாமதுரை பேரூராட்சி தலைவர் ராஜாமணி எச்சரித்துள்ளார்.
மானாமதுரை ஆனந்தவல்லியம்மன் சோமநாதர் கோயிலில் சித்திரை திருவிழா நேற்று துவங்கியது. இதற்காக வைகை ஆற்றிற்குள் பேரூராட்சி மற்றும் உபயதாரர்கள் மூலம் சுத்தம் செய்யும் பணி நடக்கிறது. விழாவிற்கு வரும் பக்தர்களின் வருகை பொருத்து, இங்கு சர்க்கஸ்,கண்காட்சி, பொருட்காட்சி நடத்த, வெளிமாநில வியாபாரிகள் வந்துள்ளனர்.
இது தவிர ஆற்றங்கரையோரம் கடைக்காரர்கள் தற்காலிக கடை அமைத்து வருகின்றனர். இது போன்ற கடைக்காரர்களிடம், பேரூராட்சிக்காக கடை வாடகை வசூலிப்பதாக கூறி உள்ளூர் ரவுடிகள், சில அரசியல் பிரமுகர்கள், வசூல் செய்வதாக தெரிகிறது.
இது குறித்து, கடந்த ஆண்டு விழாவிலேயே பேரூராட்சிநிர்வாகத்திற்கு புகார் வந்தது. இந்த ஆண்டும் கடைகளில் வசூல் செய்வதாக புகார் வந்துள்ளது.இது குறித்து பேரூராட்சி தலைவர் ராஜாமணி கூறுகையில், ” கடந்த மாத கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். முறைகேடாக பேரூராட்சி பெயரை சொல்லி வசூலில் ஈடுபடும் கும்பல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர் கூறுகையில், ”வைகை ஆறு சுத்தம் செய்யும் பணி நடக்கிறது. சில மோசடி பேர்வழிகள் தாங்களும் ஆற்றை சுத்தம் செய்வதாக கூறி வியாபாரிகளை மிரட்டி, மாமூல் வசூலிப்பதாக புகார் வந்துள்ளது. வைகை ஆற்றை சுத்தம் செய்யவோ, கடைகளில் குத்தகை வசூலிக்க யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. கடைக்காரர்கள், இது போன்று வருபவர்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம்,” என்றார்.