ஸ்ரீவிலி.-மம்சாபுரம் சாலை இருவழிப் பாதையாக மாற்றப்படும்
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று ஸ்ரீவில்லிபுத்தூர்-மம்சாபுரம் சாலையை இருவழிச் சாலையாக மாற்றி, தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரத்தில் ரூ. 22.66 லட்சம் மதிப்பில் நபார்டு திட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கால்நடை மருந்தகம் திறப்பு விழா மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை மாவட்ட ஆட்சித் தலைவர் டி.என். ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. மம்சாபுரம் பேரூராட்சி துணைத் தலைவர் பி. அய்யனார் முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜூ வரவேற்றார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியன் வாழ்த்துரையில் கூறியதாவது: ஸ்ரீவில்லிபுத்தூர்-மம்சாபுரம் சாலையை இருவழிச் சாலையாக மாற்ற வேண்டும். அப்போது தான் இப்பகுதி முழுமையான வளர்ச்சி அடையும். அரசு ஏழை மக்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றார். அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, கால்நடை மருந்தகத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றிய போது கூறியதாவது: ஸ்ரீவில்லிபுத்தூர்-மமசாபுரம் சாலையை இருவழிச் சாலைûயாக மாற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன். விரைவில் இச்சாலை இரு வழிச் சாலையாக மாற்றப்படும் என்றார்.
மேலும் வருவாய்த் துறை சார்பில் முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு அவர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சிவகங்கை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் சொ. தெய்வநாயகம், மம்சாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் பா. ஜெயச்சந்திரசேகர், மாவட்ட அரசுப் பணியாளர் (பேரூராட்சிகள் துறை) சங்கத் தலைவர் ஆ. காமராஜ், பேரூராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட ஜெயலலிதா பேரவை அவைத் தலைவர் மல்லி எஸ்.ஆர். துரைப்பாண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் அ.தி.மு.க. செயலாளர் வி.டி. முத்துராஜ் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
விருதுநகர், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் சி. சிவானந்தம் நன்றி கூறினார்.