ஸ்ரீவில்லிபுத்தூரில் மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணி: நகர்மன்ற தலைவி தொடங்கி வைத்தார்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகம் சார்பில்
மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணியை நகர்மன்றத் தலைவி
வி.செந்தில்குமாரி தொடங்கி வைத்தார். நகர்மன்ற திரு.வி.க. தொடக்கப்
பள்ளியில் இந்த சிறப்பு முகாமைத் தொடங்கி வைத்து நகர்மன்றத் தலைவி
வி.செந்தில்குமாரி பேசுகையில் கூறியதாவது:
ஸ்ரீவில்லிபுத்தூர்
நகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகள், ஆதரவற்றோர் விடுதிகள், மாணவ மாணவியர்
விடுதிகளில் இந்த நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும் பேருந்து
நிலையம், முக்கியமான சந்திப்புகளில் இதற்கான சிறப்பு முகாம்
அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலவேம்பு குடிநீரை தொடர்ந்து 3 முதல் 5 நாட்கள் குடித்து வந்தால்,
டெங்கு காய்ச்சல் வருவதை தடுக்கலாம். இந்த நீர் நோய் எதிர்ப்பு சக்தியை
பெருக்கும். ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப
சுகாதார நிலையங்களில் இலவசமாக நில வேம்பு பொடியை பொதுமக்கள் பெற்று,
வீட்டிலேயே நீரை கொதிக்கவைத்து அதில் பொடியைப் போட்டு அருந்தலாம் என்றார்
அவர்.
நிகழ்ச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர்
வி.டி.முத்துராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையின் தலைமை
மருத்துவர் ராஜாகுணசீலன், நகராட்சி ஆணையாளர் பழனிவேல், துணைத் தலைவர் சரோஜா
நடராஜன், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.