தினமலர் 15.03.2010
ஹோட்டல்களில் சுகாதார அதிகாரிகள் திடீர் ஆய்வு
அரியலூர்: அரியலூர் ஹோட்டல்களில் சுகாதார அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற் கொண்டனர். இதுபற்றி அரியலூர் வட்டார மருத்துவ அலுவலர் சண்முகம் கூறியதாவது:
பெரம்பலூர் சுகாதார பணிகள் துணை இயக்குநர் அறிவுறுத்தலின் பேரில், அரியலூர் நகராட்சி பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வட்டா மருத்துவ அலுவலர் சண்முகம், உணவு ஆய்வாளர் ரத்தினம், துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் ஸ்மித் சைமன், வகீல், நமச்சிவாயம், ரெங்கநாதன், மாவட்ட நலக்கல்வியாளர் அண்ணாதுரை ஆகியோர் அடங்கிய குழுவினர், சுமார் 10க்கும் மேற்பட்ட ஹோட்டல்களில் ஆய்வு மேற்கொண்டனர்.சமையலுக்கு வைக்கப்பட்டிருந்த பருப்பு வகைகள் மாதிரி எடுக்கப்பட்டு, ஆய்வுக்காக சென்னையிலுள்ள கிங்ஸ் இன்ஸ்ட்டியூட் நிறுனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சுற்றுப்புற தூய்மை, ஹோட்டல் சுகாதாரம், பணியாளர்களின் மருத்துவ பரிசோதனை போன்றவை ஆய்வு செய்யப்பட்டது. மேலும் உணவு பொருள் கலப்படம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.