தினமலர் 22.03.2010
ஹோட்டல், மளிகை கடைகளில் சுகாதாரத்துறை அலுவலர் ஆய்வு
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சேகர் அறிவுரையின்படி, வட்டார மருத்துவ அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் டாக்டர் வல்லவராஜ் மற்றும் சுகாதாரத்துறையினர் எருமப்பட்டி யூனியன் பகுதியில் ஹோட்டல் மற்றும் மளிகை கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.மளிகை கடைகளில் தரமான பொருட்கள் விற்கப்படுகின்றதா, காலாவதியான பொருட்கள் விற்கப்படுகின்றதா என சோதனை செய்தனர். குறிப்பாக பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள் போன்றவற்றில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்தனர். கடைகளில் தரமற்ற பொருட்கள் மற்றும் கலப்பட பொருட்கள் விற்கக்கூடாது. மீறி விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும்‘ என, எச்சரிக்கை செய்யப்பட்டது. ஆய்வின்போது வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பழனிசாமி, ஆய்வாளர்கள் முருகேசன், சந்திரன், சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.