தினமணி 23.11.2009
ஆலந்தூர் சாலை மேம்பாலம் டிசம்பர் 11-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்: துணை முதல்வர் தகவல்
சைதாப்பேட்டை ஆலந்தூர் சாலையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மேம்பாலத்தை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்கிறார் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின். உடன் (இடமிருந்து)
சென்னை, நவ. 22: சென்னை சைதாப்பேட்டை ஆலந்தூர் சாலை மேம்பாலம், ஜோன்ஸ் சாலை சுரங்கப்பாதை, செனடாப் சாலை மேம்பாலம் ஆகியவற்றை முதல்வர் கருணாநிதி டிசம்பர் 11-ம் தேதி திறந்து வைக்கவுள்ளார் என்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
சைதாப்பேட்டை ஆலந்தூர் சாலையில் மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ், ரூ. 9.3 கோடி செலவில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 420 மீட்டர் நீளம் கொண்ட இந்த மேம்பாலம் இருவழிப் போக்குவரத்தைக் கொண்டதாகும்.
இதுபோல் சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ரூ. 8.89 கோடி செலவில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. 310 மீட்டர் நீளமும், 5.5 மீட்டர் அகலமும் கொண்ட இந்த சுரங்கப்பாதை இருவழிப் போக்குவரத்தைக் கொண்டதாகும்.
செனடாப் சாலை –டர்ன்புல்ஸ் சாலை சந்திப்பில் ரூ. 19.93 கோடி செலவில், இருவழிப் போக்குவரத்தைக் கொண்ட 420 மீட்டர் நீளமுடைய மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார். ஆய்வின்போது மேயர் மா. சுப்பிரமணியன், மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
ஆய்வுக்குப் பின் துணை முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
இந்த இரண்டு மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதையை டிசம்பர் 11-ம் தேதி முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கவுள்ளார். சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மேலும் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
ரூ. 51 கோடி செலவில் பெரம்பூர் மேம்பாலமும், ரூ. 10.55 கோடி செலவில் மணியக்கார சத்திரத் தெருவில் உள்ள ரயில்வே சந்திப்பின் குறுக்கே வாகன சுரங்கப்பாதையும், ரங்கராஜபுரம் ரயில்வே சந்திப்பின் குறுக்கே ரூ. 15.75 கோடி செலவில் மேம்பாலமும், வில்லிவாக்கம் ரயில்வே சந்திப்பில் ரூ. 13.39 கோடி செலவில் வாகன சுரங்கப்பாதையும் அமைக்கப்பட்டு வருகிறது என்றார்.