தினமணி 6.11.2009
இன்று 29-வது வார்டு பகுதிகளில் புதிய வரிவிதிப்பு சிறப்பு முகாம்
மதுரை, நவ. 5: மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலம் 29-வது வார்டு பகுதிகளில் புதிய வரிவிதிப்புக்கான சிறப்பு முகாம், வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள இரட்டைவீடு குடியிருப்பு நலச்சங்கத்தில் நடைபெறவுள்ள இந்த முகாமில், புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்கள் மற்றும் கூடுதல் கட்டடங்கள் ஆகியவற்றுக்குஉடனடியாக வரிவிதிப்பு செய்யப்பட உள்ளது. மேலும், கிரையப் பத்திரங்களின் அடிப்படையில் பெயர் மாற்றத்துக்கான பரிசீலனை செய்வதோடு, வீட்டுவரி தொடர்பான இதர குறைகளையும் பரிசீலனை செய்து உடனடியாக நிவர்த்தி செய்யப்படும்.
மேற்கண்ட குறைகளை நிவர்த்தி செய்வதற்கு, பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குரிய முழு கட்டட அளவு விவரங்களுடன் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் பெறப்பட்ட பத்திர நகல், கூடுதல் கட்டடம் இருப்பின் ஏற்கெனவே வரி செலுத்தப்பட்டதற்கான ரசீது நகல், பொட்டல் வரி செலுத்தியதற்கான ரசீது நகல், கட்டட வரைபட அங்கீகாரம் பெற்றிருப்பின் அதற்கான வரைபட நகல் ஆகிய ஆவணங்களுடன் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இதில், மேற்கண்ட குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் வகையில், அனைத்து அலுவலர்களும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின் கேட்டுக் கொண்டுள்ளார்.