8 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
திருப்பூரில் பிளாஸ்டிக் டம்ளர்கள், பைகள் உள்பட தடை செய்யப்பட்ட 8 டன் பிளாஸ்டிக் பொருள்களை மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது. திருப்பூர் மாநகராட்சி சார்பில் இத்தகைய பிளாஸ்டிக் பொருள்களை விற்கக் கூடாது என எச்சரிக்கப்பட்டு, அவ்வப்போது சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் கடைகளில் சோதனையிட்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மேயர் அ.விசாலாட்சி, ஆணையர் செல்வராஜ் உத்தரவின் பேரில் நகர் நல அலுவலர் (பொ) ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் 3, 4 ஆம் மண்டலங்களின் வார்டுகளில் உள்ள கடைகள், ஹோட்டல், பேக்கரி, கிடங்குகள் என 85 கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மொத்தம் ரூ.1.25 லட்சம் மதிப்பிலான 8 டன் பிளாஸ்டிக் பை, டம்ளர்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக 16 கடை உரிமையாளர்களிடம் ரூ.23 ஆயிரத்து 50 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பார்வையிட்ட மேயர் அ. விசாலாட்சி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்யும் கடைகளில் இருந்து அவற்றை பறிமுதல் செய்வதோடு, கடுமையான அபராதமும் விதிக்கப்படும் என்றார்.