தினமலர் 24.02.2010
ரூ.1 கோடியில் நவீன தகன மேடை:சிற்ப வேலைகளுடன் நுழைவு வாயில்
வேலூர்:வேலூர் பாலாற்றங்கரையில் ரூ. ஒரு கோடி செலவில் கட்டப்பட்டு வரும் நவீன தகன மேடையும், சிற்ப வேலைப்பாடுகளுடன் நுழைவு வாயிலும் அமைக்கப்படுகிறது.வேலூர் மாநகராட்சி சார்பில் பாலாற்று மயானத்தில், உடல்களை தகனம் செய்ய ரூ. 45 லட்சத்தில் தகன மேடையும், அதையொட்டி ரூ.25 லட்சம் செலவில் தியானமண்டபம், பூங்கா மற்றும் கலைநயம் மிக்க நுழைவு வாயில் என ரூ.ஒரு கோடி செலவில் தகன மேடை கட்டப்பட்டு வருகிறது.இதில், தகவ மேடையில், உடல்களை தகனம் செய்ய நவீன “பாய்லருடன்‘ கூடிய அடுப்பு கட்டப்பட்டு வருகிறது. தகனமேடையில் உள்ள ராட்சத பாய்லருக்கும் செல்லும் உடல்கள் 30 நிமிடங்களில் எரிந்து, சாம்பலாக வெளியே வந்து விடும். பின்னர் அவை உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.
இதுகுறித்து மேயர் கார்த்திகேயன் கூறுகையில், நவீன தகன மேடை பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. அருகில் தியானமண்டபம், பூங்கா, நவீன கழிவறைகள் கட்டப்படுள்ளது.நுழைவு வாயில் ரூ. 8.44 லட்சம் செலவில், சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்படுகிறது. இதற்காக மாமல்லபுரம் சிற்பக்கலைஞர்கள் மூலம் கலைநயத்துடன், நுழைவு வாயில் அமைக்கப்படுகிறது,இவ்வாறு மேயர் கூறினார்.