தினமலர் 22.03.2010
ஏப்.1 ல் சென்ட்ரல் மார்க்கெட்டை மூட மாநகராட்சி ஆலோசனை
மதுரை : மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டை இடம் மாற்றுவதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. டெபாசிட் தொகையை செலுத்த வியாபாரிகள் மறுத்தால், தற்போதுள்ள சென்ட்ரல் மார்க்கெட்டை ஏப்.1 முதல் மூடிவிடலாமா என மாநகராட்சி ஆலோசிக்கிறது.
மாட்டுத்தாவணிக்கு சென்ட்ரல் மார்க்கெட், இடம் மாற்றப்பட உள்ளது. நிரந்தர கடைகள் கட்டப்படுவ தற்கு முன், தற்காலிக கடைகள் கட்டப்படுகின்றன. தற்போது, சென்ட்ரல் மார்க்கெட்டில் உள்ள கடைகளின் ஏல காலம், ஏப்ரல் 1ம் தேதியுடன் முடிகிறது. அதன் பிறகு, சென்ட்ரல் மார்க்கெட்டை, மாட்டுத்தாவணி தற்காலிக கடைகளுக்கு மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இப்போது சென்ட்ரல் மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு, அளவைப் பொறுத்து, மாதம் 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது. புதிய இடத்திற்கு டெபாசிட் மற்றும் மாத வாடகை தொகையை மாநகராட்சி மாற்றி அமைத்துள்ளது.
ஆனால் டெபாசிட் தொகையை செலுத்த வியாபாரிகள் தயாராக இல்லை. சில கவுன்சிலர்களே வியாபாரிகளை தூண்டிவிட்டு, ‘டெபாசிட்டே செலுத்த வேண்டாம்‘ என்று கூறுகின்றனர். இவர்களில் சிலர் பினாமி பெயர்களில் சென்ட்ரல் மார்க்கெட்டில் 50 கடைகள் வைத்துள்ளனர். இவர்கள் தான் ‘வியாபாரிகளை காப்பாற்றுவதாக கூறி, வசூலிலும் இறங்கி உள்ளனர். மார்ச் இறுதிக்குப் பிறகு, புதிய இடத்திற்கு மாறவில்லை என்றால், தற்போதுள்ள சென்ட்ரல் மார்க்கெட்டை மூடிவிடலாமா என மாநகராட்சி ஆலோசிக்கிறது.