தினமலர் 27.03.2010
ஜூன் 1 முதல் வீடுகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்
திருச்சி: ‘மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு அடித்தளமாக வீடுகள் கணக்கெடுக்கும் பணி ஜூன் ஒன்றிலிருந்து ஜூலை 15 வரை நடக்கிறது‘ என்று கலெக்டர் சவுண்டையா கூறினார். இதுகுறித்து கலெக்டர் சவுண்டையா கூறியதாவது: நம் நாட்டில் பத்தாண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுகிறது.
இதன் மூலம் மக்களை குறித்து பல புள்ளிவிபரங்கள் கண்டறியப்பட்டு, அரசின் அனைத்து திட்டங்களையும் வடிவமைக்கவும், நிறைவேற்றவும், திட்டமிடவும் முடிகிறது. கணக்கெடுப்பு பணி 1881ம் ஆண்டு முதல் நடந்துவருகிறது. 2011ம் ஆண்டு நாடு முழுவதும் ஃபிப்ரவரி ஒன்பதிலிருந்து 28 ம்தேதி வரை நடக்கவுள்ளது. அதற்கு அடித்தளமாக நாடு முழுவதும் நடப்பாண்டு வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் ஜூன் ஒன்றிலிருந்து ஜூலை 15 வரை நடக்கிறது. அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கும் வகையில் விபரங்கள் உள்ளடக்கிய தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்க அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக அனைத்து விபரங்களை சேகரிக்கும் பணி, வீடுகள் கணக்கெடுப்ப பணி நடக்கவுள்ளது. இவை தனி அட்டவணையில் சேகரிக்கப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.