தினமணி 29.04.2010
நாகர்கோவிலில் ஜூன் 1 முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு கணக்கெடுப்பாளர்களுக்கு 2 நாள் பயிற்சி
நாகர்கோவில், ஏப்.28: நாகர்கோவில் நகராட்சியில் ஜூன் 1-ம் தேதி முதல் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி தொடங்குகிறது.
இப் பணிக்காக நகராட்சி சார்பில் 323 கணக்கெடுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல்கட்டமாக இவர்கள் ஜூன் 1 முதல் 15-ம் தேதி வரை வீடுகள் மற்றும் கட்டடங்கள் குறித்தும், அவற்றின் தன்மை குறித்தும் கணக்கெடுக்க உள்ளனர். வீடுகளில் வசிப்போர் குறித்த புள்ளிவிவரங்களையும் சேகரிப்பர்.
இவர்களது பணியைக் கண்காணிக்க 54 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 2-ம் கட்டமாக துல்லியமான மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி 2011-ல் நடைபெறவுள்ளது.
அப்போது வீடுவீடாக வசிப்போரின் எண்ணிக்கை, இடம் பெயர்ந்து வந்தோர், இடமாறுதல் நிலையிலுள்ளோர் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும்.
நாகர்கோவிலில் மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஈடுபடவுள்ள பணியாளர்களுக்கு நகராட்சி அலுவலகத்தில் 2 நாள் பயிற்சிமுகாம் நடைபெற்றது. நகர்மன்ற ஆணையர் ஜானகி விடியோ காட்சிகள் மூலம் பயிற்சி அளித்தார். கணக்கெடுப்பாளர்களை 8 குழுக்களாகப் பிரித்து 2 நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.
தற்போதைய கணக்கெடுப்பில் சத்திரங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படுகின்றன.