தினத்தந்தி 25.06.2013
கொடைக்கானல் நகராட்சி பகுதியில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் நகரசபை கூட்டத்தில் தீர்மானம்
வளர்ச்சிப்பணிகள் நடைபெற நகரசபை கூட்டத்தில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளது.
நகரசபை கூட்டம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரசபை கூட்டம் தலைவர் (பொறுப்பு)
எட்வர்டு தலைமையில் நடந்தது. ஆணையாளர் (பொறுப்பு) முகமது சாகுல் அமீது
முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம் விவரம் வருமாறு:–
மோகன்:–கொடைக்கானலுக்கு வரும் நுழைவு பகுதியில் உள்ள சுங்கவரி வசூல்
மையத்தின் அருகில் தனியார் நிறுவனத்தின் சார்பில் விளம்பர போர்டுகள்
வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி வாங்கப்பட்டுள்ளதா?
ஆணையாளர்:– அனுமதி பெறப்படவில்லை. இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்த போர்டுகள் அகற்றப்படும்.
மினி தியேட்டர்
ராஜ்குமார்:–நகராட்சி கலையரங்கம் அருகில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் மினி தியேட்டர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
ஆணையாளர்:– கோப்புகளை பார்த்து நடவடிக்கை எடுக்கப்படும்.
ரகுவரன்:–நகராட்சி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள்
அனைத்தும் பழுதடைந்துள்ளன. இதனை சப்ளை செய்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
தலைவர்:–வரும் காலங்களில் தரமான நிறுவனத்திடம் இருந்து மின்உபகரணங்கள் வாங்கப்படும்.
மழைநீர் சேகரிப்பு
ராஜ்குமார்:– நகராட்சி அலுவலகம் இடிக்கப்பட்டதில் உள்ள பொருட்கள் எங்கு உள்ளது. இதன் மதிப்பு எவ்வளவு?
தலைவர்:– பழைய நகராட்சி அலுவலக கட்டிடம் இடிக்கப்பட்ட பொருட்கள்
அனைத்தும் தனியார் இடத்தில் பத்திரமாக உள்ளது. விரைவில் இந்த பொருட்கள்
பொது ஏலத்தில் விடப்படும்.
ஆல்பர்ட்:– நகராட்சி பகுதியில் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வாங்கி
விட்டு தங்கும் விடுதிகள் கட்டி வருகிறார்கள். இதைத் தவிர்த்து உரிய
முறையில் கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர்:– இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பல
கட்டிடங்களில் அமைக்கப்பட்டிருந்த மழைநீர் சேகரிப்பு அமைப்புகள்
செயல்படாமல் உள்ளது. இதனை சீரமைக்க பொது மக்களிடம் விழிப்புணர்வு
ஏற்படுத்தப்படும்.
ஆறுமுகம்:–கொடைக்கானல் நகரில் அரசு புறம்போக்கு இடங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
தலைவர்:– இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் பட்டா வழங்கப்படும்.
ஆல்பர்ட்:– பஸ் நிலையத்தில் தனியார் வாகனங்களை நிறுத்துவதால்
போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
தலைவர்:– இதுகுறித்து பலமுறை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து
இந்த நிலை நீடித்தால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
ரூ.1 கோடியே 20 லட்சம்
ஆரோக்கியம்:– கொடைக்கானல் நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளை தூர்வார வேண்டும்.
தலைவர்:– இதற்காக ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில்
இந்தப் பணிகள் தொடங்கும். அத்துடன் நகரில் சாலைகளை பராமரிப்பு செய்ய ரூ.5
லட்சமும், பொது நிதியின் கீழ் ரூ.21 லட்சமும் ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்க
உள்ளது. அத்துடன் நகரில் உள்ள 24 வார்டுகளுக்கும் தலா 5 லட்சம் வீதம்
மொத்தம் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற உள்ளது.