தினமலர் 25.05.2010
ஜூன் 1ல் வீடு வீடாக பணி ஆரம்பம்:மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு உபகரணங்கள் வழங்கல்
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி மக்கள் தொகை கணக்கெடுப்பு களப்பணியாளர்களுக்கு விண்ணப்பம் உள்பட 13 வகையான உபகரணங்கள் வழங்கப்பட்டது. ஜூன் 1 தேதி முதல் கணக்கெடுப்பு பணி துவக்கப்பட உள்ளது. இந்தியா முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்புபணி ஜூன் 1ம் தேதி துவங்கி ஜூலை 15 வரை நடக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு களப்பணியாளர்களுக்கு மூன்று கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சியில் 45 வார்டுகளில் மக்கள் தொகை கணக்கெடுக்க 240 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநகராட்சி மக்கள் தொகை கணக்கெடுப்பு பொறுப்பு அலுவலர் விவேகானந்தன் தலைமையில் களப்பணியாளர்களுக்கு நேற்றுடன் பயிற்சி முடிந்தது. பயிற்சி முடித்த அலுவலர்களுக்கு கணக்கெடுப்பு விண்ணப்பம், பென்சில், பேனா உள்பட 13 வகையான உபகரணங்கள் வழங்கப்பட்டன. மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடும்ப அட்டவணை விண்ணப்பம், வீடுகள் கணக்கெடுப்பு விண்ணப்பம் என இரு வகையான விண்ணப்பங்களை களப்பணியாளர்கள் நிரப்புவர். குடும்ப அட்டவணை விண்ணப்பத்தில், நபரின் முழுப்பெயர் மற்றும் வசிக்கும் நிலை, நபரின் பெயர் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் எவ்வாறு இடம் பெற வேண்டும், குடும்ப தலைவருக்கு உறவு, பிறந்த தேதி, பிறந்த இடம், தற்போதைய திருமண நிலை, கல்வி நிலை, தொழில், நடவடிக்கை, தந்தை; தாய்; துணைவரின் முழுப்பெயர், தேசியம், வழக்கமாக வசிக்கும் இடத்தின் தற்போதைய முகவரி, நிரந்தர வசிப்பிட முகவரி உள்பட 14 வகையான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
வீடுகள் கணக்கெடுப்பு விண்ணப்பத்தில், வீட்டு எண், வீட்டின் தரை, சுவர், கூரைக்கான பிரதான கட்டுமானப் பொருள், வீடு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது, குடும்ப எண், குடும்பத்தில் சாதாரணமாக வசிக்கும் மொத்த நபர்களின் எண்ணிக்கை, குடும்பத் தலைவரின் விவரங்கள், குடும்பத்துக்கு கிடைக்கும் வசதிகள் (வீட்டின் உரிமை நிலை, குடும்பத்துக்கென உபயோகத்தில் உள்ள வசிக்கும் அறைகளின் எண்ணிக்கை, மணமான தம்பதிகளின் எண்ணிக்கை, முக்கிய நீர் ஆதாரங்கள், குடிநீர் கிடைக்கும் இடம், விளக்கு ஒளிக்கான பிரதான எரிபொருள், கழிப்பிட வசதி, கழிவு நீர் வெளியேற இணைப்பு, குளிக்கும் வசதி, சமையலறை வசதி, சமையலுக்கு பயன்படும் எரிபொருள் ஆகியவை), குடும்பத்தில் உள்ள சொத்துக்கள் (ரேடியோ, “டிவி‘, கம்ப்யூட்டர், டெலிஃபோன், சைக்கிள், ஸ்கூட்டர், பைக், கார், ஜீப், வேன், வங்கி சேவை பயன்படுத்துதல் ஆகியவை) என மொத்தம் 35 வகையான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 45 வார்டுகளில் ஜூன் 1ம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடக்கிறது. கணக்கெடுப்பு பணியில் 240 களப்பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். களப்பணியாளர்களுக்கு தலா 150 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.