தினமணி 21.07.2010
மதுரையில் ரூ.1 லட்சம் போலி டீ தூள் பறிமுதல்
மதுரை, ஜூலை 20: மதுரையில் 10 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த போலி டீ தூள் தொழிற்சாலை செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள போலி டீ தூள் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை எஸ்.எஸ்.காலனி பொன்மேனி இஎம்எஸ் நகர் பகுதியில் போலி டீ தூள் தொழிற்சாலை செயல்பட்டு வருவதாக மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ். முருகையாவுக்குத் தகவல் கிடைத்தது. இத்தகவல் ஆட்சியர் சி.காமராஜின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
ஆட்சியர் உத்தரவின்பேரில் அதிகாரிகள் அங்கு நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்:
மதுரையைச் சேர்ந்த ராமானுஜம், ஊட்டியைச் சேர்ந்த ஆர்.குமார் ஆகியோர் கடந்த 10 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஊட்டியில் இருந்து 3-ம் தரமான டீ தூளை மிகவும் குறைந்த விலைக்கு வாங்கி, மதுரைக்கு கொண்டு வந்து டை, மரத்தூள், “சன்செட் யெல்லோ‘ என்ற வேதிப்பொருள் ஆகியவற்றைக் கலந்து நகரில் உள்ள பல்வேறு டீக்கடைகளுக்கு விநியோகித்து வந்துள்ளனர்.
இந்தப் போலி டீ தூளை சிறிது பயன்படுத்தினாலே அதிக எண்ணிக்கையில் டீ போடலாம். தூளின் கலரும் மங்காது. இவை அசாம் மற்றும் உதயா கோல்டு என்ற பெயர்களில் அரை கிலோ பாக்கெட் ரூ.105-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சில டீ கடைகளுக்கு இந்த பாக்கெட் ரூ.60 முதல் 80 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சுமார் 200 கிலோ போலி டீ தூளை பறிமுதல் செய்த பின்னர் மாநகராட்சி சுகாதார அலுவலர் வி.சுப்பிரமணியன் கூறியதாவது:
டீ கலர் கிடைக்கவும், ஸ்ட்ராங்காக இருக்கவும் இதுபோன்ற கலப்படப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அரசால் தடை செய்யப்பட்ட பொருள்களும் டீ தூளில் சேர்க்கப்பட்டுள்ளது. இது புற்றுநோய், வயிற்றுக் கோளாறு போன்றவற்றுக்கு வழிவகுக்கும்.
ரூ.1 லட்சம் மதிப்புள்ள 200 கிலோ போலி டீ தூள் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இங்கு பணியாற்றி வந்த பிரேம் என்பரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த டீ தூள் குறித்து சோதனை செய்ய சென்னைக்கு மாதிரி அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவைப்பொருத்து உணவுப் பொருள் கலப்படத் தடைச் சட்டத்தின்கீழ் சம்பந்தப்பட்டோர் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.