தினமலர் 27.07.2010
ஆலங்குளம் டவுன் பஞ்.,1வது வார்டில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும்
திருநெல்வேலி:ஆலங்குளம் டவுன் பஞ்., 1வது வார்டில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று தேமுதிக கவுன்சிலர் வேண்டுகோள் விடுத்தார்.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் ஆலங்குளம் டவுன் பஞ்., 1வது வார்டு கவுன்சிலரும், நகர தேமுதிக செயலாளருமான பழனிசங்கர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:ஆலங்குளம் டவுன் பஞ்., முதல் வார்டில் அமைந்துள்ள குருவன்கோட்டை தெரு பகுதியில் 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 190 ரேஷன் கார்டுகள் உள்ளது. இவர்கள் ஆலங்குளத்திற்கு சுமார் 4 கி.மீ தூரம் வந்துதான் ரேஷன் பொருட்களை பெற வேண்டிய நிலை உள்ளதால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.ஆலங்குளம் டவுன் பஞ்., 1வது வார்டுக்கு உட்பட்ட ரேஷன் கடையில் 4 வார்டுகளை சேர்ந்தவர்கள் அத்யாவசிய பொருட்களை வாங்குவதால் குருவன்கோட்டை பகுதி தெரு பொதுமக்கள் கஷ்டப்படுகின்றனர்.எனவே, குருவன்கோட்டை தெரு பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும். இதற்காக கான்கீரிட் கட்டட வாடகை மற்றும் மேஜை, டேபிள் வசதியை எனது சொந்த செலவில் செய்ய தயாராக உள்ளேன். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை: “”மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளை அழகுபடுத்துவதற்கு சுற்றுலாத்துறை ரூ.12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது,” என, மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மீனாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள சென்ட்ரல் மார்க்கெட் மாற்றம் செய்யப்பட்ட இடத்தில், புதிய வாகன நிறுத்துமிடம், வரவேற்பு மையம், பொருட்கள் வைப்பறை 5.62 கோடி ரூபாயில் அமைக்கப்படுகிறது. புதுமண்டபத்திலுள்ள வியாபாரிகளுக்காக புது குன்னத்தூர் சத்திரம் 2.32 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி வண்ண விளக்குகள்,பூங்கா, விளக்குத்தூண், தெப்பக்குளத்தில் நீர் நிரப்புதல், புல்வெளி அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக சுற்றுலாத்துறை 12.55 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இப்பணிகளை விரைவில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி துவக்கி வைப்பார் என்றார்.