தாராபுரம் நகராட்சி கடைகளுக்கு பழைய முறைப்படி வாடகை வசூல் ஆண்டுக்கு 1 கோடி வருமானம் இழப்பு மறு ஏலம் விட விவசாயிகள் சங்கம் கோரிக்கை
தாராபுரம்: தாராபுரம் நகராட்சிக்கு சொந்தமான கடைகளை மறு ஏலம் நடத்த வேண்டும் என்று கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் காளிமுத்து கூறியதாவது:
அந்த வகையில் தற்போது மாத வாடகையாக கடைக்கு ரூ. 1,200 முதல் ரூ.1,600 வரையில் வசூலிக்கப்பட்டு வருகிறது. மேற்சொன்ன கடைகள் பல ஆண்டுகள் ஆகியும் மறு ஏலம் விடப்படவில்லை. அதனால் இன்றைய சந்தை மதிப்பு நிலவரப்படி மிக குறைந்த வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த கடைகளை 1986ம் ஆண்டில் ஏலம் எடுத்தவர்களில் பலர் இறந்து விட்டனர். அவர்களது பெயரிலேயே வேறு நபர்கள் கடைகளை வைத்திருக்கின்றனர். பெரும்பாலானவர்கள் நகராட்சி கடைகளை உள்வாடகைக்கு விட்டு நாள் ஒன்றுக்கு ரூ.500 வரையில் பணம் சம்பாதித்து வருகின்றனர். பலர் தங்களது உரிமத்தில் இருந்த கடைகளை பக்கத்து கடைகாரர்கள் அல்லது வேறு நபர்களுக்கு ரூ. 2 லட்சம் வரையில் பணத்தை பெற்றுக் கொண்டு கொடுத்துள்ளனர். இந்த மோசடிகளால் நகராட்சிக்கு நேரடியாக வரக்கூடிய வருவாய் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தாராபுரம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு நூறு ஆண்டுகள் ஆக உள்ள நிலையில், நகர்பகுதியில் சிறுவர்களுக்கு என ஒரு பூங்கா இதுவரையில் அமைக்கப்படவில்லை. இருக்கின்ற பூங்காவை நகராட்சி நிர்வாகம் சரிவர பராமரிப்பதுமில்லை. பல வார்டுகளில் இன்னமும் அடிப்படை வசதிகள் நிறைவு செய்யப்படவில்லை.
தீர்க்க முடியாத நிலையில் குடிநீர் பாற்றக்குறை இருந்து வருகிறது. போதுமான நிதி ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் பல்வேறு பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. நகராட்சி நிர்வாகமோ வருவாய்க்கு வழிகள் இருந்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. நகரமன்றம் பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவிப்பதால் நகர வளர்ச்சியில் அக்கரை கொள்ள முடியவில்லை.
மேற்சொன்ன கடைகள் மூலமாக தற்போது நகராட்சிக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.30 லட்சம் வரையில் மட்டுமே வருவாய் இருந்து வருகிறது. அனைத்து கடைகளையும் மறு ஏலத்திற்கு கொண்டு வரும் போது, ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் பொது மக்களுக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும். இந்த அடிப்படையில் தான் கடந்த 6ம் தேதி நடைபெற்ற நகரமன்ற கூட்டத்தில் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை மறு ஏலம் விடுவதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. என்ன காரணத்தாலோ தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது. நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு, தற்போதுள்ள உரிமத்தை ரத்து செய்து மறு ஏலம் விடவேண்டும். என்று கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.