காரைக்கால் நகராட்சிக்கு ரூ.1 லட்சத்தில் குப்பைத் தொட்டிகள்
காரைக்கால் நகராட்சி நிர்வாகத்துக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் குப்பைத் தொட்டிகளை காரைக்கால் துறைமுக நிர்வாகம் வழங்கியது.
காரைக்கால் வலத்தெரு வார்டு, காதர் சுல்தான் வார்டு ஆகிய இரண்டிலும் சேகரிக்கப்படும் குப்பைகள், பிரான்ஸ் நாட்டின் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் மறுசுழற்சி செய்து உரம் தயாரிக்கும் ஒப்பந்தத்தை நகராட்சி நிர்வாகம் அண்மையில் செய்துகொண்டது.
இதற்காக இந்த வார்டுகளில் இரு நிறங்கள் கொண்ட கூடைகள் தரவும், மக்கும், மக்காத குப்பையென தரம் பிரித்து வீடுகளில் சேகரித்து, குப்பை அகற்றும் வாகனம் வரும்போது அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், காரைக்கால் நகரில் வீதிகளில் குப்பைத் தொட்டி வைப்பதற்காக, பிளாஸ்டிக்காலான 25 தொட்டிகளை ரூ.1 லட்சம் செலவில் வாங்கி, காரைக்கால் துறைமுக நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்திடம் செவ்வாய்க்கிழமை அளித்தது.
மாவட்ட ஆட்சியரகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெ. அசோக்குமாரிடம், மார்க் துறைமுக நிர்வாக தலைமை செயல் அதிகாரி கே.என். ரமேஷ் வழங்கினார். நிகழ்ச்சியில் துறைமுக அதிகாரிகள் ராஜேஷ்வர்ரெட்டி, வெற்றிவேல் ராமதாஸ், ராபர்ட்ரோக் மற்றும் காரைக்கால் நகராட்சி ஆணையர் கே. ரேவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.