தினபூமி 02.05.2013
அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ: பரிசீலிக்கும் மாநகராட்சி நிர்வாகம்

சென்னை: மே, – 2 – சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் ரூ.1க்கு மூலிகை டீ விற்பனை செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் வார்டுக்கு ஒன்று என்று மொத்தம் 200 அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு ரூ.1க்கு விற்கப்படும் இட்லி சென்னைவாசிகளிடையே மிகவும் பிரபலம். இட்லி தவிர ரூ.5க்கு சாம்பார் சாதம், ரூ.3க்கு தயிர் சாதமும் விற்பனை செய்யப்படுகிறது. அம்மா உணவகங்களில் கொஞ்சம் ஊறுகாய் அல்லது துவையல் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் அம்மா உணவகங்களில் ரூ.1க்கு மூலிகை டீ விற்பனை செய்வது குறித்து மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தலைமையில் நேற்று பரிசீலிக்கப்பட்டது. இந்த திட்டம் குறித்து முதல்வர் ஜெயலலிதாவிடம் தெரிவித்து ஒப்புதல் பெற்று ரூ.1க்கு மூலிகை டீ விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.