மாநகராட்சி 1ம்தேதி முதல் அமல் பிளாஸ்டிக் குப்பை தந்தால் குலுக்கலில் தங்க நாணயம்
சென்னை: மாநக ராட்சியில் பிளாஸ்டிக் குப்பையை வழங்கும் பொது மக்களுக்கு குலுக்கல் அடிப்படையில் தங்க நாணயம் வழங்கும் திட்டம் வரும் 1ம் தேதி முதல் செயல்படுத்தப்படுவதாக மாநகராட்சி ஆணையர் விக்ரம்கபூர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
திடக்கழிவுகளிலிருந்து மெல்லிய பிளாஸ்டிக் கழிவுகளை (குப்பையை) பொது மக்கள் பங்களிப்புடன் பிரித்தெடுக்க மாநகராட்சி புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, பிளாஸ்டிக் குப்பையை பிரித்தெடுப்பதில் ஆர்வம் காட்டும் பொது மக்களுக்கு குலுக்கல் முறையில் தங்க நாணயம் பரிசாக வழங்கும் திட்டத்தை மாநகராட்சி சமீபத் தில் அறிவித்தது. இத்திட்டம் வரும் 1ம் தேதி முதல் சோதனை அடிப்படையில் மூன்று மாதங்களுக்கு அனைத்து வார்டுகளிலும் செயல்படுத்தப் படவுள்ளது.
பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து ஒவ்வொரு வார்டு அலுவலகங்களிலும் வாரத்தில் புதன் மற்றும் சனி கிழமைகளில் காலை 9.00மணி முதல் 5.00மணி வரை அதற்கென நியமிக்கப்பட்டுள்ள மாநகராட்சி ஊழியரிடம் வழங்கவேண் டும். ஒவ்வொரு கிலோ பிளாஸ்டிக் குப்பையின் கவரில் சம்பந்தப்பட்ட உதவிசெயற்பொறியாளர் கையெழுத்திட்டு, பொது மக்களுக்கு டோக்கன் வழங்குவார். ஒவ்வொரு வார்டிலும், ஒவ்வொரு மாதமும் பிளாஸ்டிக் குப்பையின் மொத்தஅளவு 500 கிலோவிற்கு அதிகமாகும் போது, அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் புதன்கிழமையன்று குலுக்கல் முறையில் பொதுமக்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு, அரை கிராம் தங்க நாணயமும், அடுத்து 5 பேருக்கு கைகடிகாரமும் பரிசாக வழங்கப்படும். இவ்வாறு ஆணையர் விக்ரம் கபூர் தெரிவித்துள்ளார்.