தினமலர் 31.10.2013
தரைக்கடை முறைப்படுத்தும் விதிமுறை ஜன.,1 முதல் திருச்சி மாநகராட்சி அமல்
திருச்சி: “சாலையோர தரைக்கடைகளை முறைப்படுத்தும் விதிமுறைகள் வரும் ஜனவரி, 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்’ என, திருச்சி மாநகராட்சி அறிவித்துள்ளது.
திருச்சி மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருச்சி மாநகராட்சியில் உள்ள பஸ் ஸ்டாண்டுகள், வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தரைக்கடைகள் மற்றும் சாலையோர கடைகள் மூலம் வியாபாரம் செய்பவர்களை முறைப்படுத்த வேண்டியுள்ளது.
இந்த வியாபாரம் செய்பவர்களின் ஜீவாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசின் தேசிய நகர்வு நடைபாதை கொள்கை அடிப்படையிலும் மக்ககள் மற்றும் போக்குவரத்து நலன் கருதியும், வணிக பகுதிகளுக்கு அருகில் உள்ள முக்கிய சாலைகளை தேர்வு செய்து மக்கள் பயன்பெறும் வகையில் அங்கு தரைக்கடை வியாபாரம் நடத்த சாலையோர வியாபார பகுதிகளாக மாநகராட்சியின் நான்கு கோட்டங்களிலும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்ட பகுதிகள் தவிர, இதர பகுதிகளில் சாலையோர வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, திருச்சி மாநகராட்சி பகுதிகளில் சாலையோர தரைக்கடை வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள் நேரிடையாகவோ அல்லது சங்கங்கள் மூலமாகவோ இது தொடர்பான ஆலோசனைகளையும், ஆட்சேபனைகளையும் வரும் நவம்பர், 30ம் தேதிக்குள், திருச்சி மாநகராட்சி கமிஷனர் அலுவலகம் அல்லது ஸ்ரீரங்கம், கோ.அபிஷேகபுரம், பொன்மலை, அரியமங்கலம் ஆகிய கோட்ட உதவி கமிஷனர்களிடம் தெரிவித்துக் கொள்ளலாம்.
தற்போது சாலையோரம் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் தங்கள் முகவரி, மொபைல் நம்பர், வியாபாரம் செய்யும் இடம், நேரம் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும்.
தேசிய நகர்புற சாலையோர வியாபாரக் கொள்கை அடிப்படையில் திருச்சி மாநகரில் சாலையோர வியாபாரிகள் குழு அமைக்க, சாலையோர நடைபாதை சங்கங்களில் இருந்து பொறுப்பாளர்களின், பெயர் விபரங்களை வரும் நவம்பர், 13ம் தேதிக்குள் மாநகராட்சிக்கு எழுத்துப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.
மாநகர சாலையோர நடைப்பாதை வியாபாரிகள் பிரதிநிதிகள் அடங்கிய குழு மாநகராட்சி, வருவாய் துறை, போலீஸ், போக்குவரத்து துறை, தீயணைப்புத் துறை, நெடுஞ்சாலை துறை பிரதிநிதிகள், நுகர்வோர் அமைப்புகளுடன் இணைந்து சாலையோர நடைபாதை வியாபார பகுதிகள் குறித்து விவாதித்து அதன் அடிப்படையில் சாலையோர வியாபாரிகளுக்கான நலன்கள் பாதிக்காத வகையில் முடிவுகள் எடுக்கப்பட்டு ஜனவரி, 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.