தினமணி 26.12.2009
ராமேசுவரத்தில் ரூ.10ஆயிரம் மதிப்புள்ள பான்பராக், பிளாஸ்டிக் பை அழிப்பு
ராமேசுவரம், டிச.25: ராமேசுவரத்தில் ரூ.10ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பை, கப் மற்றும் போதை பாக்குகளை நகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்து வெள்ளிக்கிழமை அழித்தனர். 2004-
ம் ஆண்டு முதல் ராமேசுவரம் தீவில் பிளாஸ்டிக் பை, கப் மற்றும் போதை பாக்குகள் விற்பனை செய்ய மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருந்தார். ஆனால் தற்போது ராமேசுவரம் தீவு பகுதியில் குறிப்பாக ராமேசுவரம் கோயிலைச் சுற்றி பிளாஸ்டிக் பை, கப் மற்றும் போதை பாக்குகள் தடையின்றி விற்பனை செய்யபடுகிறது.
இதனையடுத்து வெள்ளிக்கிழமை ராமேசுவரம் தாசில்தார் அலுவலகத்தில் பாலதீன் ஒழிப்பு குறித்து ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம் துணை ஆட்சியர் ஜெயராமன் தலைமையில் நடந்தது.
கோட்டாட்சியர் இளங்கோ முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தாசில்தார் ராஜாராமன், நகராட்சி ஆணையர் போஸ், நுகர்வோர் இயக்க மாநில பொருளாளர் ஜெயகாந்தன், ராமேசுவரம் நுகர்வோர் இயக்கத் தலைவர் அசோகன், ரோட்டரி சங்கத் தலைவர் சந்திரன், அரிமா சங்கத் தலைவர் டோமினிக்ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பாலிதீன் பை, கப் மற்றும் போதை பாக்குகளை ஒழிப்பது குறித்தும், விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் தலைமையில் தலைமை எழுத்தர் சுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் கோயில் கீழவாசல் பகுதியில் கடைகளில் நடத்திய சோதனையில், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பை, கப் மற்றும் போதை பாக்குகளை பறிமுதல் செய்தனர்.
இதனை தாசில்தார் அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் நகராட்சி ஊழியர்கள் அழித்தனர்.