தினமணி 19.02.2010
மாநகராட்சி கடைகளின் வரி பாக்கி ரூ.10 கோடி
மதுரை, பிப். 18: மதுரை மாநகராட்சிக்குச் சொந்தமானக் கடைகளிலிருந்து மட்டும் இன்னும் வசூலிக்கப்பட வேண்டிய வரி பாக்கி ரூ. 10 கோடி வரை உள்ளது.
இதில், அதிகப்படியாக பெரியார் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளிலிருந்து ரூ. 1.50 கோடி வரை வரி பாக்கி வசூலிக்கப்பட வேண்டியுள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பேக்கரி, டீ கடை, மருந்துக் கடை, ஸ்டேஷனரி, பலசரக்கு உள்ளிட்ட பல்வேறு கடைகள் ரூ. 20 கோடி வரை வரி பாக்கி வைத்துள்ளன.
இந்நிலையில், கடந்த 8 மாதங்களாக மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால், ரூ. 10 கோடி வரை வரி பாக்கி வசூலிக்கப்பட்டது. இது தவிர, சொத்துவரி, குடிநீர் வரி, பாதாளச் சாக்கடை இணைப்புக்கான கட்டணம் உள்ளிட்ட வகையில், பல கோடி ரூபாய் வரி நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
கடைகளுக்கான வரி நிலுவையில், அதிகப்படியாக பெரியார் பஸ் நிலையத்தில் உள்ள 200}க்கும் மேற்பட்ட கடைகள் வரி பாக்கி செலுத்த வேண்டியுள்ளது. இக்கடைகள் சார்பில் மட்டும் ரூ. 1.50 கோடி வரை வரி செலுத்தப்படாமல் உள்ளது.
15 கடைகளுக்கு பூட்டு: இந்நிலையில், மதுரை கீழமாரட் வீதி, அண்ணா பஸ் நிலையப் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருந்துக் கடை, வாழைக்காய் கடை, முட்டைக் கடை, பேக்கரி, கருவாட்டுக் கடை ஆகிய 15 கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த 15 கடைகளிலிருந்து மட்டும் ரூ. 12 லட்சம் வரி பாக்கி செலுத்த வேண்டியிருப்பது தெரியவந்தது.
பொருள்களுடன் கடைக்கு பூட்டு: எனவே, கடைக்குள் பொருள்கள் இருந்த நிலையில் உரிமையாளர்களை மட்டும் வெளியேற்றிவிட்டு, மேற்கண்ட 15 கடைகளையும் பூட்டி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இது குறித்து, மாநகராட்சி உதவி ஆணையர் (வருவாய்) ரா. பாஸ்கரன் கூறுகையில், நிலுவையில் உள்ள வரிகளை கடை உரிமையாளர்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு செலுத்தி, கடைகளை பூட்டும் நடவடிக்கையைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும். மேலும், இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்றார்.