தினமலர் 12.03.2010
சேத்துப்பட்டில் ‘கலப்பட‘ பருப்பு விற்பனை?10 மளிகை கடைகளில் ‘சாம்பிள்‘ சேகரிப்பு
சேத்துப்பட்டு:சேத்துப்பட்டு மளிகை கடைகளில் கலப்பட பருப்பு வகைகள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து, சுகாதாரத் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி 10 கடைகளில் பருப்பு சாம்பிள்களை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பினர்.சேத்துப்பட்டு நான்கு முனை சந்திப்பில் உள்ள செஞ்சி, வந்தவாசி, ஆரணி, போளூர் ரோட்டில் 40க்கும் அதிகமான மளிகைக் கடைகள் உள்ளன. இதில், பருப்பு வகைகள் உட்பட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விற்கப்படுகின்றன.
இந்நிலையில், சேத்துப்பட்டு மளிகை கடைகள் சிலவற்றில் கலப்பட பருப்புகள் விற்கப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து சுகாதாரத் துறைக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து, தி.மலை சுகாதாரத்துறை துணை இயக்குனர் சித்ரா உத்தரவின் பேரில், சேத்துப்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் கீர்த்தி தலைமையில், வட்டார மேற்பார்வையாளர் சந்திரசேகர், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார், ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்கள் அன்பரசன், அந்தோணிராஜ், ராமச்சந்திரன் ஆகியோர் குழுவாக சென்று சேத்துப்பட்டு பஜாரில் உள்ள அனைத்து மளிகை கடைகளிலும் கலப்பட பருப்பு வகைகள் உள்ளதா என்று சோதனை நடத்தினர்.மேலும், 10 மளிகை கடைகளில் இருந்து பருப்பு வகைகளை சேகரித்து சென்னை கிண்டியில் உள்ள ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது கலப்பட பருப்புதான் என்பது நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட மளிகை கடைக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார துறையினர் தெரிவித்தனர்.மளிகை கடைகளில் நடந்த அதிரடி சோதனையால் சேத்துப்பட்டில் பரபரப்பு ஏற்பட்டது.