கோவையில் 10 இடங்களில் ரூ.2¾ கோடி செலவில் ‘அம்மா’ உணவகங்கள்
கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம், ரூ.3–க்கு தயிர்சாதம் உள்ளிட்ட உணவுகளை வழங்குவதற்காக 10 இடங்களில் ரூ.2 கோடியே 70 லட்சம் செலவில் ‘அம்மா’ உணவகங்களை திறக்க மாநகராட்சி கூட்டத்தில் நேற்று ஒப்புதல் அளிக்ப்பட்டது.
1.கோவை சிங்காநல்லூர் பஸ்நிலையம், 2. ஆர்.எஸ்.புரம், பூமார்க்கெட் ஏலமையம், 3.மணியக்காரன்பாளையம், 4. குறிச்சி மாநகராட்சி அலுவலகம், 5. ராமநாதபுரம் 80 அடிரோடு, மாநகராட்சி கட்டிடம், 6. வெரைட்டிஹால்ரோடு, திருமால் வீதி, திருமண மண்டபம், 7.மேட்டுப்பாளையம்ரோடு, பஸ்நிலையம், 8.மசக்காளிபாளையம் பள்ளி வளாகம், 9.சரவணம்பட்டி, அம்மன்நகர், 10.குனியமுத்தூர்.
ஒவ்வொரு உணவகத்திலும் தினமும் 900 பேருக்கு இட்லி, சாம்பார்சாதம், தயிர்சாதம் ஆகியவற்றை மலிவு விலையில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இட்லி அடக்கவிலை – 3 ரூபாய் 64 பைசா, சாம்பார் சாதம் அடக்கவிலை 14 ரூபாய் 73 பைசா, தயிர் சாதம் அடக்கவிலை 7 ரூபாய் 44 பைசா. இந்த விலைகளில் தயாரித்து, இட்லி ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்கும் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மலிவு விலை உணவகத்தின் மூலம் ஒரு உணவகத்துக்கு மாதத்திற்கு ரூ.2 லட்சத்து 22 ஆயிரம் வீதமும், ஒரு ஆண்டுக்கு ரூ.27 லட்சம் வீதமும், மொத்தம் 10 உணவகங்களுக்கும் ஆண்டுக்கு ரூ.2 கோடியே 70 லட்சம் அளவுக்கு மாநகராட்சிக்கு கூடுதல் செலவினம் ஆகும் என்றும், இந்த செலவினத்தை மாநகராட்சி பொது நிதியில் இருந்து மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உணவகங்கள் இந்த மாத இறுதியில் தொடங்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக மேயர் செ.ம.வேலுசாமி தெரிவித்தார்.