தினமலர் 12.04.2010
நீச்சல் பழக விருப்பமா? கட்டணம் ரூ.10 மட்டுமே
கோவை : கோவையிலுள்ள பெரும்பாலான பள்ளிகளில் தேர்வு முடிந்து, விடுமுறை விடப்பட் டுள்ளது. இதனால், மாணவ, மாணவியரில் பலரும் விளையாட்டு, பொழுது போக்கு அம்சங்களில் கவனம் செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கராத்தே, யோகா, விளையாட்டு, நீச்சல் உள்ளிட்ட பயிற்சிகளில் பங்கேற்க தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கின்றனர். கோவை நகரிலுள்ள மாணவர்களுக்கு, காந்திபார்க்கில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளம், வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. கடந்த 17 ஆண்டுகளாக செயல்படும் இந்த நீச்சல் குளம் 30 மீ., நீளம், 20 மீ.,அகலத்தில் மூன்றரை அடி ஆழம் கொண்டது. ஒரு மணி நேரத்துக்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தினமும் காலை 6.00 முதல் மாலை 6.00 மணி வரை நீச்சல் குளம் திறக்கப்பட்டுள்ளது. நீச்சல் கற்க விரும்புவோருக்கு உதவ சிறப்பு பயிற்சியாளர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த விபரங்களுக்கு 99767 67000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.