தினமலர் 29.04.2010
ரூ.10 கோடியில் குடிநீர் அபிவிருத்தி திட்டம். ஜூனில் நிறைவு! நாமக்கல் நகர மக்களின் குடிநீர் தேவைக்கு தீர்வு
நாமக்கல்: நகராட்சி சார்பில் மேற்öõகாள்ளப்பட்டுள்ள 3வது குடிநீர் திட்டப்பணிகள், ஜூன் மாதத்தில் நிறைவடையும் வகையில் பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. நாமக்கல் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மொத்தம் 11 ஆயிரத்து 413 குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு, மூன்று நாளைக்கு ஒருமுறை தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. மக்களின் குடிநீர் தேவைக்காக, நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மோகனூர் காவிரி ஆற்றில் 1961ம் ஆண்டு 18 லட்சம் ரூபாய் செலவில் முதலாவது குடிநீர் அபிவிருத்தி திட்டமும், 1984ம் ஆண்டு 1.08 கோடி ரூபாய் மதிப்பில் 2வது குடிநீர் அபிவிருத்தி திட்டமும் செயல்படுத்தப்பட்டது. இரண்டு குடிநீர் திட்டங்களின் மூலம் காவிரி ஆற்றில் நீர் உறிஞ்சி கிணறுகள் அமைத்து, குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, மேல்நிலை நீர் தேக்கத்தொட்டியில் சேமித்து, நகர மக்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது. மேலும், நகரில் பல்வேறு பகுதிகளில் ஆழ்துளை கிணறு அமைத்து, அதன் மூலமும் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒருவருக்கு 66 லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது.
மூன்றாவது குடிநீர் அபிவிருத்தி திட்டம் 2008ம் ஆண்டு 9.90 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கப்பட்டது. அத்திட்டத்திற்காக, மோகனூர் காவிரி ஆற்றில் 6 நீர் ஊறிஞ்சு கிணறுகள் அமைத்து, நீர்மூழ்கி மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து அணியாபுரம் கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து, நாமக்கல் பழைய முனிசிபால் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு வரும் 9 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத்தொட்டியில் தேக்கப்படும். இந்த தொட்டியில் இருந்து நகர மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்வதற்காக 6 புதிய மேல்நிலை நீர் தேக்கத்தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கென பதிநகரில் ஒரு லட்சம் லிட்டர், முல்லை நகரில் 1.50 லட்சம் லிட்டர், கோட்டை சாலையில் 2 லட்சம் லிட்டர், திருநகரில் 3 லட்சம் லிட்டர், பழைய முன்சீப் அலுவலகத்தில் 3 லட்சம் லிட்டர், திருச்சி சாலையில் 1.50 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.குடிநீர் திட்டத்திற்கு குழாய் அமைக்கும் பணி பெரும்பாலும் முடிக்கப்பட்டுள்ளது. தற்போது, பழைய முனிசிபால் அலுவலகத்தில் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இது குறித்து நகராட்சி கமிஷனர் ஆறுமுகம் கூறியதாவது: ”நாமக்கல் நகராட்சி மக்களுக்கு, மூன்று நாளுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்கப்படுகிறது. தற்போது, நாள் ஒன்றுக்கு 40 லட்சம் லிட்டர் தண்ணீர் மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து கொண்டு வரப்படுகிறது. புதிதாக அமைக்கப்படும் நீர் உறிஞ்சு கிணறுகள் மூலம் மேலும், 42 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு வந்து மக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணி ஜூன் மாதுத்துக்குள் முடிந்துவிடும். நிலத்தடி நீர் குறைந்துள்ள நிலையில், பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வழங்குவதில் தடை ஏற்படுவதை கருத்தில் கொண்டு, லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது,-” என்றார்.