தினமலர் 18.05.2010
ஓரங்கட்டப்பட்டது குப்பை லாரி: வீணாகியது ரூ.10 லட்சம்
தாராபுரம்: தாராபுரம் நகராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட குப்பை லாரி, பயன்பாடின்றி பயணியர் விடுதியில் நிறுத்தப்பட்டதால் வீணாகி வருகிறது. தாராபுரம் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பையை அகற்ற, 15 ஆண்டுகளுக்கு முன் ரூ.10 லட்சம் மதிப்பில் லாரி வாங்கப்பட்டது. லாரி மிகவும் பெரியதாக இருந்ததாலும், குப்பையை ஏற்றி, இறக்குவது போன்ற வேலைகளைச் செய்ய, துப்புரவு தொழிலாளர்களுக்கு சிரமமாக இருந்ததாலும் , கையாள்வது கடினமாக இருந்ததால் பயன்படுத்தாமல் ‘பாதுகாப்பாக‘ நிறுத்தினர். அதன்பின், சிறிய அளவிலான மூன்று டிப்பர் லாரிகளை வாங்கி, குப்பை அள்ள பயன்படுத்தப் பட்டது.
இந்த லாரியின் பின்பகுதியில் உள்ள தொட்டியில் குப்பையை போட்டு, கிடங்கிற்குச் சென்றதும் ஆட்கள் மூலம் கீழே இறக்க வேண்டியதில்லை. ‘ஹைடிராலிக்‘ மூலம் குப்பையை கொட்டும் வசதியுள்ளது. ரூ.10 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட லாரி, தாராபுரம் பார்க் ரோட்டில் உள்ள பயணியர் விடுதியில் காட்சி பொருளாக நிறுத்தப் பட்டுள்ளது. லாரியின் பேட்டரி, ‘ஸ்டெப்னி‘ டயர் உட்பட பல்வேறு பொருட்கள் களவு போய் விட்டன. ‘அந்த லாரியில் டேங்கர் பொருத்தி, குடிநீர் வினியோகிக்க பயன்படுத்தலாம்‘ என, கவுன்சிலர்கள் ஆலோசனை கூறினர். அந்த ஆலோசனையை நகராட்சி நிர்வாகமும் ஏற்றுக்கொண்டது. நகராட்சி அதிகாரிகள், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால், அந்த லாரி வீணாகி வருகிறது. லாரியில் உள்ள பொருட்களை ஒவ்வொன்றாக கழற்றி, பழைய இரும்பு கடைகளில் விற்று வருகின்றனர். லாரி நிறுத்தப் பட்டுள்ள பகுதி, இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்தும் இடமாகவும் மாறி வருகிறது. தற்போதுள்ள நிலையில், அந்த லாரியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியாது; மாறாக, ஏலமாவது விட வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.