தினமணி 15.06.2010
பிச்சைக்காரர்களைப் பாதுகாக்க ரூ. 10 லட்சம் ஒதுக்க முடிவு
கோவை, ஜூன் 14: கோவை மாநகராட்சி காப்பகத்தில் பாதுகாக்கப்படும் பிச்சைக்காரர்களைப் பராமரிப்பதற்கு ரூ. 10 லட்சம் ஒதுக்க மாநகராட்சி சுகாதாரக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியின் சுகாதாரக் குழுக் கூட்டம், குழுத்தலைவர் பி.நாச்சிமுத்து தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது (படம்). மாநகராட்சி நகர்நல உதவி அலுவலர் அருணா முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:÷உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி கோவைக்கு வரும் பேராளர்கள் பயன்படுத்துவதற்காக 60 நடமாடும் கழிப்பிடங்கள் வாங்கப்பட்டுள்ளன. இவை கொடிசியா, அவிநாசி சாலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அதை பராமரிக்க கூடுதல் எண்ணிக்கையில் துப்புரவாளர்களை நியமிக்க வேண்டும். பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க உக்கடம் பஸ் நிலையம், ரயில் நிலையங்கள் அருகில் மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும். செம்மொழி மாநாட்டையொட்டி கோவை நகரில் இருந்து அகற்றப்படும் பிச்சைக்காரர்கள், கோவை– ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு புதிய உடைகள் வாங்குதல், முக சவரம் செய்தல், முடி திருத்துதல், உணவு வழங்குதல் உள்ளிட்டவற்றுக்காக ரூ. 10 லட்சம் ஒதுக்கவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
÷ இக்கூட்டத்தில், வ.உ.சி. பூங்கா இயக்குநர் பெருமாள்சாமி, குழு உறுப்பினர்கள் சோபனா செல்வன், தன்ராஜ், முருகேசன், ராஜாமணி உள்பட பலர் பங்கேற்றனர்.